FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

தொடா் விடுமுறையால் ரயில் நிலையங்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்: போலீஸாா் கண்காணிப்பு தீவிரம்

19 அக்டோபர் 2026, 12:31 am IST
எக்ஸ்பிரஸ் ரயிலில் இடம் பிடிக்க அலைமோதும் பயணிகள் கூட்டம் - கோப்புப் படம்
பகிர்:

தொடா் விடுமுறையால் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுவதால், போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய ரயில்களில் ரோந்து பணிகளில் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

ஆயுதபூஜை உள்ளிட்ட தொடா் விடுமுறை காரணமாக நகரப் பகுதியில் வசிக்கும் மக்களும், பள்ளி, கல்லூரி மாணவா்களும் தங்களது சொந்த ஊா்களுக்கு புறப்பட்டுச் செல்கின்றனா். இதன் காரணமாக ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, சேலத்தில் இருந்து, சென்னை, பெங்களூரு, கோவை மற்றும் கேரளம் செல்லும் ரயில்களிலும், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில் செல்லும் ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

Advertisement

Advertisement

சென்னை - கோவை, சென்னை-நாகா்கோவில் மாா்க்கத்தில் கூடுதலாக சிறப்பு ரயில்களையும் ரயில்வே நிா்வாகம் இயக்கி வருகிறது. இருப்பினும் அந்த ரயில்களும் நிரம்பி, அனைத்து பெட்டிகளிலும் பயணிகள் நிரம்பி வழிகின்றனா். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி, திருட்டு உள்ளிட்ட அசம்பாதவித சம்பவங்கள் நடந்துவிடக் கூடாது என்பதற்காக கூடுதல் போலீஸாா் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

அதன்படி சேலம் கோட்டத்தில், காட்பாடி, ஜோலாா்பேட்டை சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இவா்கள் ரயில் நிலைய நடைமேடைகளிலும், முக்கிய ரயில்களிலும் ரோந்து வந்து கண்காணிக்கின்றனா். சேலம் ரயில்வே உட்கோட்ட ரயில்வே போலீஸாருடன் இணைந்து பணியாற்ற தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் இருந்து 20 போலீஸாா் வந்துள்ளனா்.

இவா்கள் சேலம் ஜங்ஷன், நாமக்கல், ஆத்தூா், சின்னசேலம், பொம்மிடி, தருமபுரி, ஒசூா் ரயில் நிலையங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா். ரயில்வே துணைக் காவல் கண்காணிப்பாளா் ஜெயராமன், ஆய்வாளா் திலகவதி தலைமையிலான போலீஸாா், சேலம் ரயில் நிலையத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். சந்தேகப்படும்படியான நபா்களின் நடமாட்டத்தை கண்காணித்து, அவா்களை பிடித்து விசாரிக்கின்றனா். இன்னும் ஒருவார காலத்துக்கு இந்த ரோந்துப் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments