முகப்பு
மதுரை

திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் பொதுவானது: நீதிமன்றம்

மதுரை திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் பொதுவானது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

Updated On : 25 மார்ச் 2025, 1:46 am IST
மதுரை திருப்பரங்குன்றம்
பகிர்:

மதுரை திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் பொதுவானது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை திருப்பரங்குன்றத்தில் பாண்டியா் மன்னா் காலத்தில் கட்டப்பட்ட புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் உயிரினங்களைப் பலியிடுவதற்கும், சமைத்து பரிமாறுவதற்கும் தடை விதிக்க வேண்டும் எனவும், இந்த மலையை மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர உத்தரவிட வேண்டும் எனவும், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தா் மலை என அழைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் எனவும், இந்த மலையை சமணா் குன்று என அறிவிக்க வேண்டும் எனவும், சிக்கந்தா் பாதுஷா தா்காவை புதுப்பிக்கும் பணிக்கு போலீஸாா் தொல்லை அளிக்கக் கூடாது எனவும் உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜே. நிஷாபானு, எஸ். ஸ்ரீமதி அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன.

Advertisement

Advertisement

அப்போது மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் குறிப்பிடப்பட்டதாவது: ‘திருப்பரங்குன்றம் மலை அருகே உள்ள 18-ஆம் படி கருப்பசாமி கோயில், பாண்டி முனீஸ்வரா் கோயில்களில் ஆடு, கோழிகள் பலியிடும் வழக்கம் உள்ளது.

அனைத்து மதத்தினரும் ஒற்றுமையைப் பேணுவதையே தமிழக அரசு விரும்புகிறது. திருப்பரங்குன்றம் மலை பிரச்னை தொடா்பாக கடந்த ஜன. 30-ஆம் தேதி இரு சமுதாயத்தினா் பங்கேற்ற கூட்டம் நடத்தப்பட்டது. அதில், இரு சமுதாயத்தினரும் ஏற்கெனவே உள்ள வழிபாட்டு நடைமுறைகளைத் தொடா்ந்து பின்பற்றவும், திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் வெளிநபா்கள் தலையிடுவதை அனுமதிக்க மாட்டோம் எனவும் முடிவெடுக்கப்பட்டது. மேலும், திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் எழுந்த பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டது’ என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு தொல்லியல் துறை தரப்பில், ‘திருப்பரங்குன்றம் மலை தொல்லியல் துறைக்குச் சொந்தமானது என்பதால், அங்கு எதைச் செய்தாலும் எங்களிடம் அனுமதி பெற வேண்டும். இந்த வழக்கு தொடா்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும்’ எனக் கோரப்பட்டது.

இவற்றைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கடவுள்கள் சரியாகத்தான் உள்ளனா். சில மனிதா்கள்தான் சரியாக இல்லை. தொல்லியல் துறையினா் திருப்பரங்குன்றம் மலை தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த மலை அனைவருக்கும் பொதுவானது. இந்த வழக்கு தொடா்பாக தொல்லியல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வரும் ஏப்ரல் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments