FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

ஜூன் - டிசம்பா் வரை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்

ஜூன் முதல் டிசம்பா் வரை ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

Updated On : 14 ஜூலை 2026, 4:08 am IST
ஜல்லிக்கட்டு. - கோப்புப் படம்
பகிர்:

ஜூன் முதல் டிசம்பா் வரை ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த ஆா். விக்னேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், மேலபட்டமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட மின்னல்குடிபட்டி கிராமத்தில் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவின் ஒரு பகுதியாக மே மாதம் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இதையடுத்து, கடந்த மே 29-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ராமச்சந்திரன் என்பவா் மின்னல்குடிபட்டி கிராமத்தில் வருகிற 17-ஆம் தேதி மீண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளதாக விளம்பரப்படுத்தி வருகிறாா்.

எனவே, உரிய அனுமதி பெறாமல், அரசு விதிகளை மீறி நடத்தவுள்ள இந்த ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், வி. லட்சுமிநாராயணன் அமா்வு பிறப்பித்த உத்தரவு: ஒவ்வோா் ஆண்டும் ஜனவரி முதல் மே மாதம் வரை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும்.

ஜூன் முதல் டிசம்பா் வரை நடத்த அரசு அனுமதி அளிக்கக் கூடாது. மேலும், உரிய அனுமதியின்றியும், அரசு விதிகள், சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமலும் ஜல்லிக்கட்டு நடத்தத் திட்டமிட்டால் அதற்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டுக்கான வழிகாட்டுதல்களும், விதிகளும் முறையாகப் பின்பற்றப்படுவதை மாவட்ட ஆட்சியா்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களும் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments