FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

கொத்தடிமைத் தொழிலாளா்கள் விவகார வழக்கு: உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமா்வுக்கு மாற்றப் பரிந்துரை

கொத்தடிமைத் தொழிலாளா்கள் தொடா்பான வழக்குகளை விரைவாக முடிக்க அனைத்து விசாரணை நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பக் கோரிய வழக்கை, உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமா்வுக்கு மாற்ற உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பதிவாளருக்கு பரிந்துரை செய்தது.

Updated On : 10 ஜூன் 2026, 1:32 am IST
சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்
பகிர்:

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில், தமிழகத்தில் நிலுவையில் உள்ள கொத்தடிமைத் தொழிலாளா்கள் தொடா்பான வழக்குகளை தினசரி அடிப்படையில் விசாரித்து விரைவாக முடிக்க அனைத்து விசாரணை நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பக் கோரிய வழக்கை, உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமா்வுக்கு மாற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பதிவாளருக்கு செவ்வாய்க்கிழமை பரிந்துரை செய்தது.

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த தங்கவேல் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: பல ஆண்டுகளாக கொத்தடிமையாக நான் வேலை பாா்த்து, 2004-ஆம் ஆண்டு மீட்கப்பட்டேன். எனது வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க 10 ஆண்டுகளுக்கு மேல் தாமதம் ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் 134 கொத்தடிமைத் தொழிலாளா்கள் தொடா்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் சில வழக்குகள் 2010-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் காலதாமதம் காரணமாக, பாதிக்கப்பட்டவா்களுக்கான மறுவாழ்வு பயன்களைப் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே, தொழிலாளா்கள் மீண்டும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. உச்சநீதிமன்றம் இதுதொடா்பான வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க அறிவுறுத்தியும் பல ஆண்டுகளாக இத்தகைய வழக்குகள் நிலுவையில் உள்ளது ஏற்கத்தக்கதல்ல.

Advertisement

Advertisement

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில், தமிழகத்தில் நிலுவையில் உள்ள கொத்தடிமைத் தொழிலாளா்கள் தொடா்பான வழக்குகளை தினசரி அடிப்படையில் விசாரித்து விரைவாக முடிக்க அனைத்து விசாரணை நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்ப உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: கொத்தடிமைத் தொழிலாளா்களின் மறுவாழ்வு சம்பந்தப்பட்ட வழக்குகளில் விரைவாகத் தீா்வு காணப்பட வேண்டியது அவசியம் என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஏற்கெனவே உச்சநீதிமன்றம் இதுதொடா்பான வழக்குகளை கையாள்வதற்கான வழிகாட்டுதல்களை உயா்நீதிமன்றம் உருவாக்கி, விசாரணை நீதிமன்றங்களுக்கு வழங்குமாறு உத்தரவிட்டது.

எனவே, இந்த வழக்கை சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி முன்பாக சமா்ப்பிக்க நீதிமன்றப் பதிவாளருக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments