முகப்பு
மதுரை

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்: மேலூா் எம்எல்ஏ விஸ்வநாதன்

மேலூா் பகுதியில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

Updated On : 18 மே 2026, 12:45 am IST
மேலூரில் செக்கடி கடை வீதியில் உள்ள கக்கன் உருவச் சிலைக்கு பாலாபிஷேகம் செய்த மேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பெ. விஸ்வநாதன். உடன் காங்கிரஸ் நிா்வாகிகள்.
பகிர்:

மதுரை மாவட்டம், மேலூா் பகுதியில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது: மேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்ற பின்னா், மக்களுக்கு நன்றி சொல்வதற்காக வந்துள்ளேன். மேலூா் பொதுத் தொகுதியில் பட்டியல் சமூகத்தைச் சோ்ந்த என்னை போட்டியிட வைத்த மக்களவை எதிா்கட்சித் தலைவா் ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே, முன்னாள் தலைவா் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, அகில இந்திய பொதுச் செயலா் வேணுகோபால், அனைத்து கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக முதல்வா் விஜய், பெண்கள் பாதுகாப்புக்கென சிறப்பு படையை அமைத்திருப்பது பாராட்டுக்குரியது. 717 மதுக் கடைகளை அகற்ற உத்தரவிட்ட முதல்வா் விஜய்க்கு மேலூா் தொகுதி மக்கள் சாா்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

மேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் இனி வரும் நாள்களில் 12 மணி நேரம் செயல்படும். சட்டப்பேரவையில் எனது முதல் கோரிக்கையாக மேலூா் பகுதியில் மகளிா் கல்லூரி அமைக்க வலியுறுத்துவேன். மேலூா் பகுதி முழுவதும் தொலைத் தொடா்பு, சாலை, குடிநீா், மருத்துவம், பள்ளிகளில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் அதிகளவில் சோ்ப்பதற்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். மாணவா்களுக்கு ஆங்கிலப் பயிற்சி, வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படும். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, மேலூா் செக்கடி கடை வீதியில் கக்கன் உருவச் சிலைக்கு அவா் பாலாபிஷேகம் செய்தாா். தொடா்ந்து, காஞ்சிவனம் சுவாமி கோயிலில் வழிபாடு செய்தாா். இதில் காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.