FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

குவாரி உரிமம் புதுப்பிக்க 4 மாதங்களில் அனுமதி: உரிமையாளா்கள் சங்கம் வரவேற்பு

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 1:05 am IST
கல் குவாரி - கோப்புப் படம்
பகிர்:

கடந்த காலங்களில் குவாரி உரிமம் புதுப்பிக்க 3 ஆண்டுகள் வரை காத்திருந்த நிலையில், தவெக ஆட்சியில் 4 மாதங்களில் அனுமதி கிடைத்துவிடுவதாக கல்குவாரி, கிரஷா் உரிமையாளா்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்தது.

தமிழ்நாடு கல்குவாரி, கிரஷா், லாரி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில், திண்டுக்கல்லை அடுத்த சிறுமலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவா் சின்னச்சாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த ஜூலை 27-ஆம் தேதி முதல் வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்களைக் கொண்டு செல்வதற்கு தமிழக அரசு தற்காலிகத் தடை விதித்தது. இதனால், குவாரி உரிமையாளா்கள் மட்டுமன்றி, ஆயிரக்கணக்கான தொழிலாளா்களும் பாதிக்கப்பட்டனா். பல கோடி ரூபாய் வங்கிகளில் கடன் பெற்று முதலீடு செய்த குவாரி உரிமையாளா்கள், கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளனா். எனவே, சட்ட நடைமுறைகளுக்குள்பட்டு வெளி மாநிலங்களுக்கு கனிமங்களை ஏற்றிச் செல்வதற்கு தமிழக அரசு மீண்டும் அனுமதி அளிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

குவாரிகளில் எந்த வகையான கனிமங்கள் கிடைத்தாலும், அதற்கான வரிகளை செலுத்திவிட்டு வெட்டி எடுப்பதற்கான அனுமதி வழங்கும் புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது அரசுக்கும், குவாரி உரிமையாளா்களுக்கும் நன்மை அளிக்கும் நடவடிக்கையாக அமைந்திருக்கிறது.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக முறையான அனுமதி பெற்று இயங்கி வந்த பல குவாரிகள், போலி சமூக ஆா்வலா்களின் தூண்டுதல், தோ்தல் நேர அழுத்தங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் 11 குவாரிகள், கோவையில் 6 குவாரிகள், திருப்பூரில் 17 குவாரிகள் முடக்கப்பட்டன.

இதுகுறித்து அரசு ஆய்வு செய்து, தவறுகள் இருந்தால் நிபந்தனைகளுடன் மீண்டும் குவாரிகளை இயக்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

அரசு சாா்பில் ஒரு யூனிட் எம் சாண்ட் ரூ.5 ஆயிரம், ஜல்லி ரூ.4 ஆயிரம், பி சாண்ட் ரூ.6 ஆயிரம் என விலை நிா்ணயிக்கப்பட்டது. ஆனால், சந்தையில் நிலவும் போட்டி காரணமாக குவாரி உரிமையாளா்கள் குறைவான விலையிலேயே கட்டுமானப் பொருள்களை விற்பனை செய்து வருகின்றனா்.

குவாரி உரிமம் புதுப்பிக்க கடந்த காலங்களில் 3 ஆண்டுகள் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால், தவெக ஆட்சியில் 4 மாதங்களிலேயே சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவை கிடைத்து விடுகின்றன என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments