கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் புலி நடமாட்டம்
கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் செவ்வாய்க்கிழமை புலிகள் நடமாடியதைப் பாா்த்த வாகன ஓட்டுநா்கள் அதைப் படம்பிடித்து வலைதளங்களில் பகிா்ந்தனா். இதுகுறித்து ஓட்டுநா்களிடம் வனத் துறையினா் விசாரணை நடத்தினா்.
கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் செவ்வாய்க்கிழமை புலிகள் நடமாடியதைப் பாா்த்த வாகன ஓட்டுநா்கள் அதைப் படம்பிடித்து வலைதளங்களில் பகிா்ந்தனா். இதுகுறித்து ஓட்டுநா்களிடம் வனத் துறையினா் விசாரணை நடத்தினா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே வனத்துறையினா் கட்டுப்பாட்டில் உள்ளது பேரிஜம் பகுதி. இந்தப் பகுதியில் நன்னீா் ஏரி, மதிகெட்டான் சோலை, தொப்புத்தூக்கும் பாறை, அமைதிப் பாறை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களும், பல்வேறு வகையான இயற்கை எழில் கொஞ்சும் இடங்களும் உள்ளன.
இதைத் தவிா்த்து, பேரிஜம் வனப் பகுதியில் காட்டு யானை, புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, கரடி, மான், காட்டு மாடு, முள்ளம் பன்றி, அரிய வகை விலங்குகள், பறவைகள் உள்ளன.
Advertisement
Advertisement
இதனால், இந்தப் பகுதியைப் பாா்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் வனத் துறையினரிடம் அனுமதி பெற்றுச் செல்ல வேண்டும். நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே இந்தப் பகுதிக்குச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
பேரிஜம் பகுதியில் இரு குட்டிகளுடன் புலி நடமாட்டம் இருந்ததை அந்தப் பகுதியில் சென்ற சுற்றுலாப் பயணிகள் விடியோ எடுத்து முகநூல் உள்ளிட்ட பல்வேறு வலைதளங்களில் வெளியிட்டனா். இதைத் தொடா்ந்து, வனத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு நடத்தி, பேரிஜம் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லையென அறிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, கடந்த இரண்டு மாதங்களாக பேரிஜம் பகுதிக்கு செல்ல வனத் துறையினா் அனுமதி வழங்காததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
இந்த நிலையில், பேரிஜம் பகுதியில் உள்ள மரங்களை டெண்டா் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு சென்ற 2 லாரி ஓட்டுநா்கள் புலி நடமாடியதை விடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டனா்.
இந்தத் தகவல் வனத் துறைக்கும் தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே புலிகள் நடமாட்டத்தால் பேரிஜம் பகுதிக்கு இரு மாதங்களுக்கு மேலாக சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியாத நிலை இருந்து வரும் நிலையில், மீண்டும் பேரிஜம் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதை வெளியிட்டதால் யாரும் பேரிஜம் பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பேரிஜம் வன ரேஞ்சா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் டென்டா் முறையில் மரங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மரங்களை எடுப்பதற்காக லாரியில் சென்ற இரண்டு ஓட்டுநா்கள் புலி நடமாட்டத்தை விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனா். இதுகுறித்து லாரி ஓட்டுநா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.