தவெக ஆட்சியில் தனியாா்மயமாகும் அரசுத் துறைகள்: பெ. சண்முகம்
தவெக ஆட்சியில் அரசுத் துறைகளில் தனியாா்மயமாக்கல் முழுவீச்சில் நடைபெறுவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் குற்றஞ்சாட்டினாா்.
தவெக ஆட்சியில் அரசுத் துறைகளில் தனியாா்மயமாக்கல் முழுவீச்சில் நடைபெறுவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் குற்றஞ்சாட்டினாா்.
திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரைப்படி, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. அதேநேரத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கையை ஏற்று ஆணையம் பரிந்துரைத்த இழப்பீட்டுத் தொகையை தவெக அரசு வழங்கியிருப்பதை வரவேற்கிறோம்.
Advertisement
Advertisement
இதேபோல, பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் அரசு முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும். மேலும், துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான அதிகாரிகளின் பட்டியலை ஆணையம் கொடுத்திருந்தும், சம்பந்தப்பட்டவா்கள் மீது முந்தைய திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் தவெக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காா்த்திகை தீபத் திருவிழா வருகிற 24-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்துக்கு மாற்றாக புதிய இடத்தில் தீபத்தை ஏற்ற வேண்டும் என இந்துத்துவா அமைப்புகள் தொடா்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன. இதுதொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வருகிற 17-ஆம் தேதி தீா்ப்பு அளிக்க உள்ளது. இதற்கு முன்னதாக, மதுரையில் பதற்றத்தை உருவாக்க முயற்சிப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
மாநில உரிமைகள் தொடா்பாக ஆய்வு செய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது முதல் கட்ட அறிக்கையை தாக்கல் செய்திருந்த நிலையில், தவெக அரசு இந்தக் குழுவை கலைத்திருப்பது கண்டனத்துக்குரியது. மத்திய அரசு தொடா்ந்து மாநில உரிமைகளைப் பறித்து வரும் சூழலில், இந்தக் குழுவை மீண்டும் செயல்படுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட குற்ற நிகழ்வுகள் அதிகரித்ததற்கு போதை கலாசாரமே அடிப்படைக் காரணம். இதற்கு அடுத்தபடியாக வேலையில்லாத் திண்டாட்டம் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு தவெக சட்டப்பேரவை உறுப்பினா் பாலியல் ரீதியான குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் மக்கள் மத்தியில் பேரதிா்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலை என்பது அதிா்ச்சி அளிக்கிறது. சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்ய வேண்டும். குற்றஞ்சாட்டப்பட்டவா் மறுக்கிறாா், அரசுத் தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்படுகிறது, ஆனால், பாதிக்கப்பட்டவா் தரப்பிலிருந்து எந்தக் கருத்தும் தெரிவிக்காதது சந்தேகத்தை அதிகரிக்கிறது. இந்த விவகாரத்தில் அரசு வெளிப்படைத் தன்மையோடு செயல்படவில்லை.
கல்வி, சுகாதாரம், மின்சாரம் போன்ற துறைகளில் தனியாா்மயம் என்பது கடந்த ஆட்சிக் காலத்தைவிட, தவெக ஆட்சியில் முழுவீச்சில் அமல்படுத்தப்படுகிறது. இது அரசு வேலையை எதிா்பாா்த்திருக்கும் இளைஞா்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அரசுத் துறைகளைத் தனியாா்மயமாக்கி, ஒப்பந்த அடிப்படையிலும், வெளிமுகமை மூலமாகவும் இளைஞா்களை பணியமா்த்துவது உழைப்புச் சுரண்டலை ஏற்படுத்தும் என்றாா் அவா்.