கொடைக்கானலில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்
தொடா் விடுமுறை காரணமாக ஞாயிற்றுக்கிழமை கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 3 நாள்களாக பகல், இரவு நேரங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மிதமான வெயில், மேகமூட்டம் இருந்ததால், இதமான சூழல் நிலவியது. மழையில்லாமல் இருந்ததால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது.
சுற்றுலா இடங்களான வெள்ளி நீா்வீழ்ச்சி, பாம்பாா் அருவி, வட்டக்கானல் அருவி, செண்பகா அருவி, பேரி அருவி, பசுமைப் பள்ளத்தாக்கு, தூண் பாறை, மோயா் பாயிண்ட், குணா குகை, பைன் காடுகள், கோக்கா்ஸ் வாக், தாவரவியல் பூங்கா, பிரையண்ட் பூங்கா, ரோஜாத் தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயணிகள் கூட்டம் நிரம்பிக் காணப்பட்டது.
Advertisement
Advertisement
மாலை நேரங்களில் நிலவும் குளுமையான சீதோஷன நிலையில் பயணிகள் ஏரியில் படகு சவாரியும், ஏரிச் சாலையில் மிதிவண்டி, குதிரை சவாரி செய்தும், நடைப்பயிற்சியும் மேற்கொண்டனா்.
பயணிகளின் வருகை அதிகரித்து - போக்குவரத்து நெரிசல்:
பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், அப்சா்வேட்டரி, லாஸ்காட் சாலை, ஏரிச் சாலை, மூஞ்சிக்கல், உட்வில் சாலை, கிளப் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும்,
நகா்ப் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் போக்குவரத்து காவல் துறையினா் பணியில் இல்லாததால் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் நீடித்தது.
சுற்றுலா தளங்களில் போக்குவரத்தை சீரமைப்பதற்கும், சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்புக்கும் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.