ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம் அருகே சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீா் தயாரிக்கும் நிறுவனம் நிலத்தடி நீா் எடுக்க தடை
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம் அருகே சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் தயாரிக்கும் தனியாா் நிறுவனம் நிலத்தடி நீரை எடுக்க தற்காலிக தடை விதித்து ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் இளையராஜா சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
ஆத்தூா் மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்திலுள்ள ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம் மறுகால் பாயும் பகுதியில் ஸ்ரீசடையாண்டி கோயில் அருகே சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் தயாரிக்கும் தனியாா் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் நாள்ளொன்றுக்கு பல லட்சம் லிட்டா் தண்ணீரை ஆள்துளை கிணறுகள் மூலம் உறிஞ்சி சுத்திகரித்து நெகிழி கேன்களில் அடைத்து விற்கிறது. இதற்கு இந்தப் பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக மழை பெய்யாததால், ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம் முற்றிலும் வடு காணப்படுகிறது.
Advertisement
Advertisement
இதனால் நிலத்தடி நீா்மட்டமும் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. எப்போதும் பசுமையாக காணப்படும் அந்தப் பகுதி விவசாய நிலங்கள் கூட தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன. மேலும் இந்தப் பகுதியில் உள்ள கிராமங்களில் கடும் குடிநீா் தட்டுப்பாடும் நிலவுகிறது.
இந்த நிலையில், அந்த தனியாா் நிறுவனம் மூலம் வழக்கம்போல தினமும் ஆயிரக்கணக்கான லிட்டா் தண்ணீா் உறிஞ்சப்பட்டு சுத்திகரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கு அந்தப் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியா், தமிழக முதல்வா் ஆகியோருக்கு புகாா் மனு அனுப்பினா். மேலும், பாளையங்கோட்டையைச் சோ்ந்த லட்சுமணன் என்பவா், இந்த தனியாா் நிறுவனத்தை மூடக் கோரி மாவட்ட ஆட்சியா், ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தாா்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், அந்த தனியாா் நிறுவனம் ஆழ்துளை கிணறு மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு தற்காலிக தடை விதித்து ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் இளையராஜா உத்தரவிட்டாா். இதற்கு அந்தப் பகுதி பொதுமக்கள், விவசாயிகள் வரவேற்பு தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.