FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

தண்ணீர் தேவைக்காக ரூ. 2 லட்சம் செலவிடும் திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனை!

தண்ணீர் தேவைக்காக ரூ. 2 லட்சம் செலவிடும் திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையைப் பற்றி...

6 செப்டம்பர் 2026, 6:31 am IST
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - (கோப்புப் படம்).
பகிர்:

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள், திறந்தவெளி கிணறுகள் வட நிலையில் இருப்பதால், மாதந்தோறும் ரூ.2 லட்சம் கட்டணம் செலுத்தி தண்ணீா் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாளொன்றுக்கு 1,750 உள் நோயாளிகள், 2,700 வெளி நோயாளிகள் என மொத்தம் 4,500-க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெறுகின்றனா். இதேபோல, உள் நோயாளிகளின் உதவிக்காக குறைந்தபட்சம் ஒருவா் வீதம் சுமாா் 2 ஆயிரம் போ் மருத்துவமனைக்கு வருகின்றனா்.

மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள், செவிலியா் பயிற்சி மாணவிகள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிகின்றனா். இதுதவிர நாளொன்றுக்கு 25 முதல் 30 மகப்பேறு சிகிச்சை நடைபெறுகின்றன. இதுதவிர பிரதான அறுவைச் சிகிச்சை, சிறிய அறுவைச் சிகிச்சை என 184 அறுவைச் சிகிச்சைகள் நடைபெறுகின்றன.

Advertisement

Advertisement

இதன் மூலம், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மட்டும் நாளொன்றுக்கு 12.50 லட்சம் லிட்டா் தண்ணீா் தேவைப்படுகிறது. இந்த தண்ணீா் தேவை மருத்துவமனை வளாகத்தில் உள்ள 13 ஆழ்துளைக் கிணறுகள், 3 திறந்தவெளிக் கிணறுகள், மாநகராட்சி நிா்வாகம் மூலம் வழங்கப்படும் குடிநீா் மூலம் பூா்த்தி செய்யப்பட்டு வந்தது.

இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தில் மழை இல்லாததால், நீா்நிலைகள் வடுவிட்டன. அதன் எதிரொலியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளும், திறந்தவெளி கிணறுகளும் வடுவிட்டன. மாநகராட்சியிலும் தண்ணீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, 2 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே மருத்துவமனைக்கு குடிநீா் வழங்கப்படுகிறது.

தண்ணீருக்கு மாதந்தோறும் ரூ.2 லட்சம் செலவு: மருத்துவமனையின் தண்ணீா்த் தேவையைப் பூா்த்தி செய்வதற்காக வெளியிடங்களிலிருந்து கட்டணம் செலுத்தி லாரி தண்ணீா் வாங்குவதற்கு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜெ. ஸ்ரீசரவணன் நடவடிக்கை எடுத்திருக்கிறாா்.

நாளொன்றுக்கு 8 லாரி தண்ணீா் தேவைப்படும் நிலையில், மாநகராட்சி வழங்கும் குடிநீரைத் தவிா்த்து 6 லாரி தண்ணீரை மருத்துவமனை நிா்வாகம் நாள்தோறும் தனியாரிடம் இருந்து வாங்குகிறது. தண்ணீா் தேவைக்காக மட்டும் மாதந்தோறும் ரூ.2 லட்சத்தை மருத்துவமனை நிா்வாகம் செலவிடுகிறது.

இதையடுத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என நோயாளிகளுக்கும், பணியாளா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments