மதுரை மாநகராட்சி பள்ளியில் கூடுதல் கழிப்பறை கட்ட ஆணையர் உத்தரவு
மதுரை மாநகராட்சி ஈ.வே.ரா.மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கழிப்பறைகள் கட்டுமாறு அதிகாரிகளுக்கு ஆணையர் அனீஷ்சேகர் உத்தரவிட்டார்.
மதுரை மாநகராட்சி ஈ.வே.ரா.மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கழிப்பறைகள் கட்டுமாறு அதிகாரிகளுக்கு ஆணையர் அனீஷ்சேகர் உத்தரவிட்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை ஆணையர் அனீஷ்சேகர் புதன்கிழமை ஆய்வு செய்தார். அவர் மேலவாசல் முதல் பாஸ்கரதாஸ் நகர் எனப்படும் திடீர்நகர் வரையிலான மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை பார்வையிட்டார். அப்போது அவரிடம் அப்பகுதியில் தெரு நாய்கள் அதிகமிருப்பதாகவும், இதனால் அச்சம் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து தெரு நாய்களைப் பிடிக்க சுகாதாரப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.
பின்னர் பேச்சியம்மன் படித்துறை, தளவாய் அக்ரஹாரம் பகுதியில் உள்ள மழை நீர் வடிகால் இரும்பு மூடிகள் அமைக்கப்படுவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வடக்குமாசி வீதியில் உள்ள முத்துசாரதா மாநகராட்சி ஸ்கேன் மையத்தை ஆய்வு செய்த பின்னர், தெற்கு வெளிவீதியில் உள்ள ஈ.வே.ரா. மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தை ஆய்வு செய்தார். அங்கு பள்ளியின் பின்பகுதியில் உள்ள வாய்க்காலை மறைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் சுற்றுச்சுவர் பணிகளை அவர் ஆய்வு செய்தார். அப்பள்ளியின் சத்துணவு மைய சுவற்றில் வர்ணம் பூசுமாறு கூறிய ஆணையர், கூடுதல் கழிப்பறைகள் கட்டவும் சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மதுரை ரயில் நிலையம் முதல் திருமலைநாயக்கர் மகால் வரை அமைக்கப்படும் பாரம்பரிய நடைபாதை பணிகளைப் பார்வையிட்ட அவர் டவுன்ஹால் சாலை பகுதியில் சேதமடைந்த பேவர்பிளாக்குகளை மாற்றி சீரமைக்கவும் உத்தரவிட்டார். ஆய்வின் போது மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) உதவி ஆணையர் பிரேம்குமார், செயற்பொறியாளர் சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.