FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காளையார்கோவிலில் மருது சகோதரர்கள் சிலை வைக்கக்கோரி மனு: தலைமைச் செயலர் பதிலளிக்க உத்தரவு

சிவகங்கை காளையார்கோவிலில் உள்ள மருது சகோதரர்கள் நினைவிடத்தில் அவர்களுக்கு சிலை வைக்க அனுமதி கோரிய வழக்கில்

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

சிவகங்கை காளையார்கோவிலில் உள்ள மருது சகோதரர்கள் நினைவிடத்தில் அவர்களுக்கு சிலை வைக்க அனுமதி கோரிய வழக்கில், தமிழக தலைமைச்செயலர், உள்துறைச் செயலர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலைச் சேர்ந்த மாமன்னர் மருதுபாண்டியர் அறக்கட்டளை தலைவர் நாகராஜன் தாக்கல் செய்த மனு:  நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த தலைவர்களில்  மருது சகோதரர்கள் மிக முக்கியமானவர்கள். சின்ன மருது ஆங்கிலேயருக்கு எதிராக பிரகடன அறிக்கை வெளியிட்டதால் சின்ன மருது மற்றும் அவரின் குடும்பத்தினர் உள்ளிட்ட 541 பேர் ஆங்கிலேயர்களால் 1801-ஆம் ஆண்டு அக்டோபரில்  திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். மருது சகோதரர்கள் அக்டோபர் 24 ஆம் தேதி தூக்கிலிடப்பட்ட நிகழ்வு திருப்பத்தூரில்  அரசு விழாவாக நடத்தப்படுகிறது. 
ஆனால் மருது சகோதரர்கள் வாழ்ந்த இடமான காளையார்கோவிலில் எவ்வித நினைவு ஆலயமும் தமிழக அரசால் கட்டப்படவில்லை. ஆனால் எங்கள் கிராம முன்னோர் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகள் உள்ளிட்டோர்  காளையார்கோவில் சோமநாதமங்கலம் கிராமத்தில் மருது சகோதரர்களுக்கு நினைவு ஆலயம் கட்டியுள்ளனர்.
இந்த நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24 ஆம் தேதி விளக்கு பூஜை நடத்தி வருகிறோம். 1964 ஆம் ஆண்டில் காளையார்கோவிலில் உள்ள மருது சகோதரர்கள் நினைவிடத்தில் இரண்டரை அடி உயரத்தில் கல் சிலை வைக்கப்பட்டது. இந்த கல் சிலை நிறுவப்பட்டு அதிக ஆண்டுகள் ஆன நிலையில் சேதமடைந்துள்ளது.
எனவே காளையார்கோவில் சோமநாதமங்கலம் மருது சகோதரர்கள் நினைவிடத்தில் ஐந்தரை அடி  உயரத்தில் பெரிய மருது கல் சிலையும், ஐந்து அடி உயரத்தில் சின்ன மருது கல் சிலையும் வைக்க அனுமதியளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக தமிழக தலைமைச் செயலர், உள்துறைச்  செயலர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு  ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments