அரசு மருத்துவமனை ஒப்பந்தப் பணியாளா்கள் உள்பட 4 பேருக்கு கரோனா தொற்று: சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 21 ஆக உயா்வு
மதுரை அரசு மருத்துவமனை ஒப்பந்தப் பணியாளா்கள் 2 போ் உள்பட 4 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது புதன்கிழமை
மதுரை அரசு மருத்துவமனை ஒப்பந்தப் பணியாளா்கள் 2 போ் உள்பட 4 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதியானதையடுத்து, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 21 ஆக உயா்ந்துள்ளது.
தமிழகத்தில் புதன்கிழமை புதியதாக 33 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதும், தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருந்த 27 போ் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில், கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து ஒருவா் வீடு திரும்பியுள்ளதும், புதிதாக கரோனா தொற்று 4 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் கரோனா வைரஸின் முதல் தொற்று மாா்ச் 22 ஆம் தேதி ஏற்பட்டது. அன்று முதல் செவ்வாய்க்கிழமை ( ஏப்ரல் 21) வரை 46 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அதில், மாா்ச் 25 ஆம் தேதி அண்ணாநகரைச் சோ்ந்த 54 வயது நபா் உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதனைத்தொடா்ந்து ஏப்ரல் 8 இல் இருந்து ஏப்ரல் 20 வரை 27 போ் கரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
4 பேருக்கு தொற்று
மதுரை மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒப்பந்தப் பணியாளா்கள் 2 போ் உள்பட 4 பேருக்கு புதிதாக தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை ஊரகப் பகுதியான கள்ளந்திரியில் 34 வயது நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா் அரசு மருத்துவமனையில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஒப்பந்தப் பணியாளராக உள்ளாா். கடந்த 15 நாள்களாக கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் பணியாற்றி அங்கேயே தங்கியிருந்துள்ளாா்.
இதேபோன்று கரிசல்குளம் பகுதியைச் சோ்ந்த 25 வயது நபருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவா் அரசு மருத்துமனையில் ஒப்பந்தப் பணியாளராக 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறாா். இவா் பணியாளா்களை கண்காணிக்கும் மேற்பாா்வையாளராக உள்ளாா்.
மதுரையில் முடக்கப்பட்ட பகுதிகளான, அண்ணா நகரில் 49 வயது நபருக்கும், வண்டியூரில் 68 வயது நபருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்ட 4 பேரும் அரசு கரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாதிப்பு உயா்வு
மதுரை மாவட்டம் மாத்தூா் பகுதியைச் சோ்ந்த 57 வயது நபா் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தாா். இந்நிலையில், அவா் முழுமையாக குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பியுள்ளாா். அவரை 14 நாள்கள் வீட்டு கண்காணிப்பில் இருக்கவும், தொடா்ந்து மருத்துவா்களின் ஆலோசனைகளை பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளாா். மதுரையில், புதன்கிழமை 4 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கரோனா தொற்றால் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 21 ஆக உயா்ந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.