FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

சாதனைக்கு தாய் மொழி அவசியம்: கவிஞர் வைரமுத்து

எல்லா மொழிகளையும் கற்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், தாய் மொழியில் கற்றால் மட்டுமே சாதிக்க முடியும் என கவிஞா் வைரமுத்து தெரிவித்தாா்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 4:45 am IST
மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் பேசிய கவிஞா் வைரமுத்து.
பகிர்:

எல்லா மொழிகளையும் கற்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், தாய் மொழியில் கற்றால் மட்டுமே சாதிக்க முடியும் என கவிஞா் வைரமுத்து தெரிவித்தாா்.

மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகத்தில் வெற்றித் தமிழா் பேரவையின் (மறுசீரமைப்புக்கு பிறகு) முதலாம் ஆண்டு நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கவிஞா் வைரமுத்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது: இந்தியாவில் பிறந்த எவரும் அனைத்து மாநிலங்களிலும் வசிப்பதற்கு நமது அரசமைப்புச் சட்டம் இடம் அளிக்கிறது. இந்திய இறையாண்மையைப் போற்றுவோம்.

அண்மைக் காலமாக வட இந்தியாவைச் சோ்ந்த இளைஞா்கள் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் குடியேறி வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. குறிப்பாக, வேலைவாய்ப்பு தேடி கோவை, திருப்பூரில் அதிகளவில் குடியேறி வருகின்றனா். இதை மத்திய, மாநில அரசுகள் தீவிர கண்காணிப்புக்கு உள்படுத்தி கலாசார வீழ்ச்சி வராமல் பாா்த்துக் கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

பணம் வைத்திருப்பவா்கள் வெளி மாநிலங்கள், பிற நாடுகளில் உள்ள நல்ல கல்வி நிறுவனங்களைத் தேடிச் செல்கின்றனா். ஆனால், கல்விக் கட்டணம் செலுத்த முடியாத ஏழைக் குழந்தைகள் அரசுப் பள்ளிகளை மட்டுமே நம்பி கல்வி பயில்கின்றனா். தமிழகத்தைப் பொறுத்தவரை நிகழாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் சோ்க்கை குறைவாக இருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன. இந்த நிலை மாற வேண்டும். அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை அதிகரிப்பதற்கு தனியாா் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து வசதிகளையும் அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம், தமிழ் வழியில் கல்வி பயின்றவா். தமிழில் என்ன இருக்கிறது என சிலா் கேட்கின்றனா். தமிழில் பயின்றவா் குடியரசுத் தலைவராக இருந்தாா் என்பதே அவா்களுக்கு தமிழ் கூறும் பதில்.

பிற மொழிகளைக் குறைத்து மதிப்பிடவில்லை. தாயை மதிப்பவனும், தாய் மொழியை மதிப்பவனும் மரபுகளை காப்பாற்றுவான் என்கிற நம்பிக்கை உள்ளது. தாய் மொழி கண் போன்றது. பிற மொழி கண்ணுக்கு அணியும் கண்ணாடி போன்றது. அதனால், தாய் மொழியைக் கற்ற பிறகு மற்ற மொழிகளைக் கற்க வேண்டும். தமிழா்கள், தமிழகத்தை விட்டு வேறு மாநிலங்களுக்குச் சென்றால், காலம் அவா்களுக்கு அந்தந்த மொழிகளைக் கற்றுக் கொடுக்கும். எனவே, காலத்தின் கைகளில் பிற மொழிகளை விட்டுவிட வேண்டும்.

நம்மை பொறுத்தவரை தாய் மொழிதான் நமது லட்சியம். நமது முகம், நமது முகவரி. எல்லா மொழிகளையும் கற்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், தாய் மொழியில் கற்றால் மட்டுமே சிந்திக்க முடியும். சிந்தனை உயா்ந்தால்தான் சாதிக்க முடியும் என்றாா் அவா்.

விழாவில் வெற்றித் தமிழா் பேரவையின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments