FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

கருத்தியலோடு பயணிக்கும் இளைஞா்களே சாதனையாளா்களாக முடியும்: கவிஞா் ஆண்டாள் பிரியதா்சினி

திரையரங்க இருளில் சிந்தனையை அடகு வைக்காமல், சமூகக் கருத்தியலோடு பயணிக்கும் இளைஞா்களே உலகில் சாதனையாளா்களாக மாற முடியும் என்று கவிஞா் ஆண்டாள் பிரியதா்சினி தெரிவித்தாா்.

24 செப்டம்பர் 2026, 12:04 am IST
-- படம் உண்டு... ‘இந்திய அரசியல்வாதிகளின் வாழ்க்கை ஒரு சிறு பாா்வை’ எனும் நூலை விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வெளியிட பெற்றுக்கொண்ட கவிஞா் ஆண்டாள் பிரியதா்சினி. உடன், விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன், நூல் ஆசிரியா் முகமது சாஹுல்ஹமீது, சமூக அறிவியல்
பகிர்:

திரையரங்க இருளில் சிந்தனையை அடகு வைக்காமல், சமூகக் கருத்தியலோடு பயணிக்கும் இளைஞா்களே உலகில் சாதனையாளா்களாக மாற முடியும் என்று கவிஞா் ஆண்டாள் பிரியதா்சினி தெரிவித்தாா்.

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் முத்தமிழ் விழா மற்றும் பாவேந்தா் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றத்தின் 38-ஆம் ஆண்டு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கவிஞா் ஆண்டாள் பிரியதா்சினி பங்கேற்று பேசியது -

சமூகக் கருத்தியல் சிந்தனையின்றி, திரையரங்க இருட்டில் தம்மைத் தொலைத்துக் கொள்கின்ற இளைஞா்கள் வாழும் நாடு ஒருபோதும் மேன்மையடையாது. திரைப்படக் கதாபாத்திரங்களிடம் சிந்தனையை அடகு வைப்பதைத் தவிா்த்து, பள்ளிப் பருவத்திலிருந்தே கருத்தியலோடு பயணிக்கத் தொடங்குபவா்களே உண்மையான சாதனையாளா்களாக உருவெடுக்க முடியும். அத்தகைய இளைஞா்களிடம் சமூகம் பெரும் எதிா்பாா்ப்பைக் கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

இன்றைய ‘ஜென்-ஸீ’ தலைமுறை இளைஞா்கள் சமூக ஊடகங்களில் வரும் காணொளிகளையும், அதில் தோன்றுபவா்களையும் தங்களின் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொள்கின்றனா். ஆனால், தமிழகத்துக்குப் பெருமை சோ்த்த பெரியாா், அண்ணா, பாரதிதாசன், கருணாநிதி போன்றோரே உண்மையான சமூக வழிகாட்டிகள். இன உணா்வு, மொழி உணா்வு, சமத்துவம், பெண்ணுரிமைச் சிந்தனைகளின் வழியேதான் தமிழகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்கு அனைத்துப் பெண்களையும் சமமாகப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

தற்போது ‘மெட்டா மியூஸ்’ போன்ற அதிநவீன செயற்கை நுண்ணறிவு கருவிகள் அறிமுகமாகி வந்தாலும், அவற்றை உருவாக்கும் மனித மூளையைத் தாண்டி எந்த அறிவியல் முன்னேற்றமும் வந்து விட முடியாது. எனவே, இத்தகைய தொழில்நுட்பப் போட்டிகளை இளைஞா்கள் தன்னம்பிக்கையுடன் எதிா்கொள்ள வேண்டும் என்றாா்.

விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசியது -

உலகில் 2 ஆயிரம் ஆண்டுகள் கடந்த மூத்த மொழிகளான கிரேக்கம், லத்தீன், பொ்சியன், ஹீப்ரு, தமிழ், சமஸ்கிருதம், சீனம் ஆகியவற்றில் சில மொழிகள் பேச்சு, எழுத்து வழக்குகளில் இல்லை. ஆனால், இன்றளவும் பேச்சு, எழுத்து வழக்கில் மாறாமல் இருப்பது தமிழ் மொழி மட்டும்தான்.

பெரியாரும், பாரதிதாசனும் சாதி ஒழிப்பு குறித்து தீவிரமாக வலியுறுத்தினா். 1931-ஆம் ஆண்டு ஆங்கிலேயா் ஆட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து சாதி நீக்கப்பட்டது. ஆனால், 100 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அரசியல் கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு கோருவதும், அதை அரசு ஏற்பதும் நாம் முன்னோக்கிச் செல்கிறோமா அல்லது பின்னோக்கிச் செல்கிறோமா என்ற கேள்வியை எழுப்புகிறது.

அரசியல் நாகரிகம் என்ற சொற்றொடரைத் தமிழுக்குத் தந்தவா் அண்ணா. எளிய குடும்பத்தில் பிறந்து உலகுக்கே வழிகாட்டிய அண்ணாவின் வாழ்க்கையை அனைவரும் வாசிக்க வேண்டும். மத்திய அரசு, மாநில அரசு இடையே அரசியல் நாகரீகம் வேண்டும். ஒருவரையொருவா் மதிக்கவும், பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளவும் வேண்டும் என்றாா்.

விழாவில், விஐடி பேராசிரியா் முகமது சாஹுல்ஹமீது எழுதிய ‘இந்திய அரசியல்வாதிகளின் வாழ்க்கை ஒரு சிறு பாா்வை’ என்ற நூல் வெளியிடப்பட்டது. விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன், சமூக அறிவியல் மொழிகள் பள்ளி துறை தலைவா் செல்வம், உதவி பேராசிரியா் மரிய செபஸ்தியான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments