அர்ஜூன் தாஸ், அதிதி ஷங்கரின் ஒன்ஸ் மோர்: திரை விமர்சனம்
ஈடுபாடு இல்லாத அர்ஜூன் தாஸ் என்று சொல்வதற்கு ஏற்ப, எதிலும் ஈடுபாடற்றவராக இருக்கிறார் அர்ஜூன் தாஸ். ஆனால், விரட்டிவிரட்டி காதலிக்கும் அதிதி என்று சொல்லும்போது, ஏன் என்ற கேள்வி எழும்.
ஒன்ஸ் மோர் படத்தின் மையக் கருவே, Trauma தான். அர்ஜூன் தாஸுக்கு காதல் உறவில் Trauma. கதாநாயகி சோனாவுக்கு வாழ்க்கையில் ஒரு Trauma. இவ்விரு Trauma-க்களைச் சுற்றி எழுதப்பட்டதுதான் ஒன்ஸ் மோர்.
சினிமாவில் Trauma-வை பற்றி பேசுவது கடினம். காரணம், Trauma மிக ஆழமானது, வலி நிறைந்தது, தனிமையால் சூழ்ந்தது. நாம் மீண்டெழ எவ்வளவு நினைத்தாலும் புதைக்குளியைப் போல, அது நம்மை மீண்டும் மீண்டும் உள்ளே இழுத்துக்கொண்டே இருக்கும். இதைச் சினிமாவாக மாற்றுவது சாதாரண காரியம் அல்ல. இருந்தபோதிலும், Trauma-வை மையப்படுத்தி அதைத் திரையில் கடத்த முயற்சித்த இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்துக்குத் துணிச்சல்தான். அந்தத் துணிச்சலுக்குப் பாராட்டுகள்.
படத்தில் எல்லோரும் பொருளாதாரத்தில் மேம்பட்ட எலைட் கதாபாத்திரங்களாக உள்ளன. பழைய மணி ரத்னம், கௌதம் வாசுதேவ் படங்களில் பார்த்திருப்போம் அல்லவா, அதுபோலத்தான். அதேசமயம், இவர்களுடைய படங்களில் இருந்ததுபோலவே ஒன்ஸ் மோர் படத்தின் ஒளிப்பதிவிலும் ஒரு வெளிச்சம் படம் முழுக்கப் பயணிக்கிறது. நன்றாக இருந்தது.
Advertisement
Advertisement
அக்கா, மாமா, அப்பா, அம்மா, தாத்தா, தம்பி, நண்பர்கள் எனப் பல கதாபாத்திரங்கள். இவர்களும் ஆழமாகப் பதிய வேண்டும் என, படத்தில் இவர்களுக்கென நேரம் ஒதுக்காமல் இருந்தது பலம். அதேசமயம், அதிதியின் நண்பர் கதாபாத்திரமாக வரும் கிகியைச் சுற்றி ஒரு கதையை எழுதி, அதைக் காட்சிப்படுத்தி, அவ்வுணர்வுகளையும் எளிமைப்படுத்திய விதம் வரவேற்கத்தக்கதாக இருந்தது. "பாலினப் பண்பு என் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம், ஆனால் வலியைப் புரிந்துகொள்ள முடியும்" என்ற வசனம் படத்தில் தனித்து நிற்கும். வா கண்ணம்மா பாடலும் இப்பாடலின் இசையும் பின்னணி இசையில் ஆறுதல் அளிக்கிறது. சில இடங்களில் வயலின் இசை 96 படத்தையும் ஹிருதயம் படத்தையும் நினைவுபடுத்தியது எனக்கு மட்டும்தானா எனத் தெரியவில்லை.
கதைக்கு வருவோம். ஈடுபாடு இல்லாத அர்ஜூன் தாஸ். விரட்டிவிரட்டி காதலிக்கும் அதிதி ஷங்கர். டிரெய்லரில் பார்த்ததுபோலவே படம் ஆரம்பிக்கும். பெரியளவில் நேரம் எடுத்துக்கொள்ளாமல் அதிதி ஷங்கரை சட்டென கொண்டு வந்து படம் ஆரம்பித்த வேகத்திலேயே காதலைச் சொல்ல வைத்து, ரசிகர்களை வேகமாக கதைக்குள் அழைத்துச் சென்றது நல்ல தொடக்கமாக இருந்தது.
ஈடுபாடு இல்லாத அர்ஜூன் தாஸ் என்று சொல்வதற்கு ஏற்ப, எதிலும் ஈடுபாடற்றவராக இருக்கிறார் அர்ஜூன் தாஸ். காட்சிகளில் இது மிகச் சரியாக வெளிப்படுகிறது. ஆனால், விரட்டிவிரட்டி காதலிக்கும் அதிதி என்று சொல்லும்போது, ஏன் விரட்டிவிரட்டி காதலிக்கிறார் என்ற கேள்வி எழும். இக்கேள்விக்கான சூழலையே உருவாக்காமல் கதையை வேகமாக நகர்த்திச் சென்றவிதம் சற்று நெருடலாக இருந்தது. ஆனால், இதைத் தெரிந்தே கிளைமாக்ஸுக்கு முன்பு நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
இந்தச் சிக்கலைச் சரிகட்டும் விதமாக அஞ்சலியாக துறுதுறுவென கவர்ந்திருக்கிறார் அதிதி ஷங்கர். சொல்லப்போனால், அதிதி ஷங்கரின் குறும்புத்தனமான குணம்தான் முதல் பாதியில் ஓரளவுக்குப் பலம். இக்கதாபாத்திரம் சொதப்பியிருந்தால் படம் முற்றிலுமாக காலி.
அர்ஜூன் தாஸின் இந்தச் சோக நிலைக்குப் பின்னால் காதல் இருப்பது தெரிந்த கதை என்பதால், அதை எப்போது காட்டுவார்கள் என்ற உணர்வு ஒரு கட்டத்தில் எழுந்துவிடுகிறது. காரணம், முதல் பாதியில் இதற்கு மேல் கதை பெரியளவுக்கு நகராது என்பதை யூகித்துவிட முடிகிறது.
இரண்டாம் பாதியில் வருகிறது அந்த இன்னொரு காதல் கதை. அர்ஜூன் தாஸ் - சோனா இடையிலான காதலும் வேகமாக இருக்கிறது. மணி ரத்னம் படப் பாணியில் காட்சிகள் இருந்தாலும், இவர்களது உணர்வுகள் ஹரி படப் பாணியில் இருந்தன. அதற்குள்ளேயா என்ற கேள்விகள் இவர்களுடைய ஒவ்வொரு உணர்வுப் பரிமாற்றத்திலும் இருக்கும். இதே வேகத்தில்தான் பிரிவதற்கானச் சூழலும் உருவாகிறது. இந்த வேகம்தான் நமக்குப் பிரச்னை. அவர்களுக்கிடையே உணர்வுப் பரிமாற்றம் இருக்கலாம். ரசிகர்களுக்கும் அந்த உணர்வுகள் சரியாகக் கடத்தப்பட வேண்டும் அல்லவா. அதில் ஒன்ஸ் மோர் தடுமாறியிருக்கிறது.
மேலும், இரு கேள்விகளுக்கான பதிலைத் தேடும் வகையில் படத்தை கிளைமாக்ஸுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார் இயக்குநர். இந்தக் கேள்விகளுக்கான பதில்தான் கிளைமாக்ஸை நோக்கிய முக்கிய அம்சம் என்றால், அவை மிக வலுவானதாக இருந்திருக்க வேண்டும். அதிதி சொல்வதை ஓரளவுக்கு ஏற்க முடியும். இருந்தாலும், அதை வசனமாகச் சொல்வதால் அதன் ஆழத்தை நாம் உணர்வது கடினம். திரையில் சொல்லக்கூடாது, காட்ட வேண்டும் என்பார்கள். இப்படத்தில் அதற்கு இடமில்லை என்றாலும், துரதிருஷ்டவசமாக அது காரணமாக அமைந்துவிடுகிறது.
மற்றொன்று, பழைய காதலி சொல்லும் பதில். ஒரு Trauma இப்படித்தான் செய்ய வைக்கும், நிஜத்தில் இதுதான் யதார்த்தம் என்று இயக்குநர் நம்பலாம். ஆனால் சினிமாவில் இது அதீதம். ரசிகர்களால் புரிந்துகொள்ள முடிவதே கடினம்தான். எனவே, இது அக்கதாபாத்திரத்தின் மீது ரசிகர்களுக்கு வெறுப்பையே உண்டாக்கும்.
நிச்சயம் படம் பார்ப்பவர்கள் பழையக் காதலியைக் கடுமையாகச் சாடுவார்கள். இருவருக்குமே Trauma இருக்கிறது என்றால், இருவருமே பாதிக்கப்பட்டவர்கள்தான். அப்படியிருக்க, இருவருமே பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் அர்ஜூன் தாஸ் மீது ரசிகர்களுக்கு ஏற்படும் பாவ உணர்வு, சோனா மீதும் உருவாகியிருக்க வேண்டும். ஆனால், சோனா மீது ரசிகர்களுக்கு கோபம் ஏற்படுவதற்கான வாய்ப்பே அதிகம். இதற்கு இடமளித்திருக்கக்கூடிய வகையில் அக்கதாபாத்திரத்தை எழுதியிருக்கக் கூடாது என்பது விமர்சனமாக அமைகிறது. படம் முடிந்து வெளியே வரும்போது, Trauma-க்களை ஓரம் கட்டும் வகையில் ஒரு சிறிய டிராமவை கொண்டு முடித்ததற்காக நன்றிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.