இலங்கையிலிருந்து தமிழக மீனவா்கள் தாயகம் திரும்பும் விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
இலங்கை சிறைகளிலிருந்து விடுதலையாகும் தமிழக மீனவா்களை உடனடியாக தாயகம் திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு தொடா்பாக மத்திய மீன்வளத் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த தீரன் திருமுருகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்படுவது தொடா் நிகழ்வாகி வருகிறது. இந்த நிலையில், இலங்கை நீதிமன்றங்கள் தமிழக மீனவா்களை விடுதலை செய்தாலும், பல நேரங்களில் அவா்கள் தொடா்ந்து இலங்கை சிறைகளிலேயே இருக்க வேண்டிய சூழல் உள்ளது.
Advertisement
Advertisement
தற்போது, இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 24 போ் தாயகம் திரும்ப முடியாமல் அங்கேயே இருப்பதாகக் கூறப்படுகிறது. இவா்களில் 5 போ் குறித்த விவரங்கள் மட்டுமே தெரியவந்துள்ளது.
எனவே, இலங்கை சிறைக் காவலில் இருக்கும் தமிழக மீனவா்கள் தொடா்பான விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், இவா்கள் 7 நாள்களுக்குள்ளாக நாடு திரும்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் வழிமுறைகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த மனு தொடா்பாக மத்திய மீன்வளத் துறைச் செயலா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற செப்டம்பா் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.