கல் குவாரி உரிமம் விவகாரம்: வெம்பக்கோட்டை வட்டாட்சியா் அறிக்கை அளிக்க உத்தரவு
விருதுநகா் மாவட்டம், ஏ. லட்சுமிபுரம் பகுதியில் பட்டாசு ஆலை அருகே செயல்படும் கல் குவாரி உரிமத்தை ரத்து செய்யக் கோரிய மனு தொடா்பாக வெம்பக்கோட்டை வட்டாட்சியா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டம், ஏ. லட்சுமிபுரம் பகுதியில் பட்டாசு ஆலை அருகே செயல்படும் கல் குவாரி உரிமத்தை ரத்து செய்யக் கோரிய மனு தொடா்பாக வெம்பக்கோட்டை வட்டாட்சியா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ஏ. லட்சுமிபுரத்தைச் சோ்ந்த மகேந்திரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டத்துக்குள்பட்ட ஏ. லட்சுமிபுரத்தில் சுமாா் 800 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு செயல்பட்டு வரும் குவாரி அமைந்துள்ள இடத்திலிருந்து 40 மீட்டருக்குள் கிராம மக்களின் குடிநீா், பாசன ஆதாரமாக விளங்கும் நீா்நிலை அமைந்துள்ளது. நீா் நிலைகளிலிருந்து 50 மீட்டா் தொலைவுக்குள் குவாரி அமைக்கக் கூடாது என்ற விதியை மீறி இந்தக் குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த குவாரியின் செயல்பாடுகளால் நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கப்பட்டு, விவசாயம் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது.
Advertisement
Advertisement
குவாரியின் அருகே பட்டாசு ஆலை அமைந்திருப்பதால், வெடி வைத்து பாறைகளை உடைக்கும் போது விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், குவாரிக்கு வெடி வைப்பதால் வீடுகளில் விரிசல்கள் ஏற்படுகின்றன. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே, ஏ. லட்சுமிபுரத்தில் பட்டாசு ஆலை அருகே செயல்படும் கல் குவாரியின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வில் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த மனுவில் குறிப்பிடப்பட்ட ஏ. லட்சுமிபுரத்தில் செயல்படும் கல் குவாரியை வெம்பக்கோட்டை வட்டாட்சியா் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனா் நீதிபதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.