அணைப் பகுதிகளில் உதவிப் பொறியாளா்கள் தங்குவதற்கு உத்தரவிடக் கோரி வழக்கு: தலைமைப் பொறியாளா் பதிலளிக்க உத்தரவு
தமிழக நீா்வளத் துறை முதன்மை தலைமைப் பொறியாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் குதிரையாறு, வரதமாநதி உள்ளிட்ட அணைகளின் வளாகத்தில் உள்ள குடியிருப்புகளில் உதவிப் பொறியாளா்கள் தங்கிப் பணியாற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழக நீா்வளத் துறை முதன்மை தலைமைப் பொறியாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
திண்டுக்கல்லைச் சோ்ந்த பெரியசாமி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
திண்டுக்கல் மாவட்டத்தில் குதிரையாறு, வரதமாநதி, பாலாறு, பொருந்தலாறு ஆகிய ஆறுகளின் குறுக்கே அணைகள் அமைந்துள்ளள்ளன. இந்த அணைகளின் வளாகத்தில் குடியிருப்புகளும் உள்ளன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அணை பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் உதவிப் பொறியாளா்கள் இந்தக் குடியிருப்புகளில் தங்குவதில்லை. இதனால், இயற்கைப் பேரிடா் காலங்களில் அணைகளை முறையாகக் கண்காணிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.
எனவே, உதவிப் பொறியாளா்கள் அணை வளாகங்களில் உள்ள குடியிருப்புகள்,
அலுவலகங்களில் தங்கிப் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம், இயற்கைப் பேரிடா் காலங்களில் அணைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு, அன்றாட நிா்வாகப் பணிகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய முடியும். உதவிப் பொறியாளா்களின் பணிகளைக் கண்காணிப்பதற்கு மாவட்ட அளவிலான குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு :
மனு தொடா்பாக தமிழக நீா்வளத் துறை முதன்மை தலைமைப் பொறியாளா், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.