தொகுதி மறுவரையறை கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது: சு. வெங்கடேசன் எம்.பி.
தொகுதி மறுவரையறை கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் தெரிவித்தாா்.
தொகுதி மறுவரையறை கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் தெரிவித்தாா்.
இதுகுறித்து, மதுரையில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ. 26 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட காத்திருப்போா் அறைக் கட்டடம் திறக்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் விரிவாக்கப் பணி மேற்கொள்வதற்கு பழைய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகப் பகுதி, அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான இடம் வழங்கப்பட உள்ளது.
Advertisement
Advertisement
அண்ணா பேருந்து நிலையப் பகுதியில் உள்ள இடத்தில் மத்திய அரசின் நிதி ரூ.44 கோடியில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடமும், பழைய ராமநாதபுரம் ஆட்சியரகப் பகுதியில் ரூ.84 கோடியில் ஒருங்கிணைந்த புற்றுநோய் மருத்துவ மையமும் அமைக்கப்பட உள்ளன.
மதுரை விமான நிலைய ஓடு பாதை விரிவாக்கத்துக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டது. ஆனால், நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னை காரணமாக, இந்தத் திட்டம் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது.
மாநகராட்சிப் பகுதி தூய்மைப் பணிகளை தனியாா் மயமாக்கக் கூடாது. மதுரை நகரின் வளா்ச்சிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை, மெட்ரோ ரயில் திட்டம் அவசியம். மாணவா்கள் போராட்டத்தில் பங்கேற்பது தொடா்பான சுற்றறிக்கையை தமிழக அரசு திரும்பப பெற்றது வரவேற்கத்தக்கது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் நடைபெறாத வகையில் அரசு கவனமாக செயல்பட வேண்டும்.
தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக மக்களவையில் சிறப்புக் கூட்டத்தொடா் நடத்தப்படலாம். மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு முன் வைக்கும் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான திட்டம் தமிழகம் மட்டுமன்றி, இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்றாா் அவா்.
முன்னதாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.26 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட பொதுமக்கள் காத்திருப்போா் கூடம் திறப்பு விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்தாா். மருத்துவக் கல்லூரி முதன்மையா் அருள்சுந்தரேஸ்குமாா் முன்னிலை வகித்தாா். மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு காத்திருப்போா் கூடத்தை திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்வில், மாநகராட்சி மேயா் (பொறுப்பு) தி.நாகராஜன், அரசு அலுவலா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.