திருமங்கலம் அரசு மகப்பேறு பிரிவு கட்டுமானப் பணி விரைவுபடுத்தப்படுமா?
திருமங்கலம் அரசு மகப்பேறு பிரிவு கட்டுமானப் பணிகள் குறித்து...
திருமங்கலம் அரசு மருத்துவமனையில் ரூ.5.50 கோடியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் புதிய மகப்பேறு, குழந்தைகள் நலப் பிரிவின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகள், குழந்தைகளின் அவசர மருந்துவத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், மருத்துவமனை வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தனிப் பிரிவு அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கின.
இதில், 35 படுக்கை வசதிகளுடன் கூடிய கர்ப்பிணிகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு, அதி நவீன அறுவைச் சிகிச்சை அரங்குகள், சிசுக்கள் தீவிர பராமரிப்புக்கான வென்டிலேட்டர், இன்குபேட்டர் வசதிகள், அறுவைச் சிகிச்சைக்கு பிந்தைய தீவிர கண்காணிப்புப் பிரிவு உள்ளிட்டவைகள் அமைக்கப்பட உள்ளன.
Advertisement
Advertisement
பணிகள் ஆரம்பித்து ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் நிறைவடையாமல் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இந்தத் திட்டம் கடந்த ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது என்பதால், பாரபட்சம் காட்டப்பட்டு பணிகள் தொய்வடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, ரோஸ் அரிமா சங்கத் தலைவர் அனிதா பால்ராஜ் கூறியதாவது:
திருமங்கலம், இதன் சுற்றுவட்டாரக் கிராம மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் மருத்துவமனையாக இது திகழ்கிறது. நவீன கருவிகளுடன் கூடிய புதிய கட்டடப் பணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்த மருத்துவமனை திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகின்றன.
எனவே, தமிழக அரசு தலையிட்டு இந்தக் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.