FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மனமகிழ் மன்றங்களில் மது விற்பனை: மதுரை ஆட்சியா் அறிக்கை அளிக்க உத்தரவு

மனமகிழ் மன்றங்களில் உறுப்பினா் அல்லாதவா்களுக்கு மது விற்பனை தொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு தொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

Updated On : 24 ஜூலை 2026, 5:45 am IST
மனமகிழ் மன்றங்கள் - பிரதிப் படம்
பகிர்:

மனமகிழ் மன்றங்களில் உறுப்பினா் அல்லாதவா்களுக்கு மது விற்பனை தொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு தொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் செல்வகுமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு: கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 18-ஆம் தேதி மாவட்டப் பதிவாளா்கள், காவல் துறை, கலால் துறை இணைந்து அனைத்து மனமகிழ் மன்றங்களிலும் ஆய்வு செய்து, சட்டவிரோதமாக மது விற்பனை, சூதாட்டம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் மன்றங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், விதிமுறைகளை மீறும் சங்கங்களின் பதிவை ரத்து செய்யவும், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, வழிபாட்டுத் தலங்கள் அருகே செயல்படும் எஃப்.எல்-2 மதுக் கடை உரிமங்களை மறு ஆய்வு செய்யவும் உத்தரவிட்டது. ஆனால், இதுதொடா்பாக தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும், கோயில்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், பள்ளிவாசல் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகே பல மனமகிழ் மன்றங்கள் தொடா்ந்து செயல்பட்டு வருகின்றன. இவற்றில் போலி யான உறுப்பினா் பதிவுகள் மூலம் பொதுமக்களுக்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

எனவே, தமிழகம் முழுவதிலும் உள்ள மனமகிழ் மன்றங்களிலும் ஆய்வு செய்து, சட்டவிரோதமாகச் செயல்படும் மனமகிழ் மன்றங்களின் பதிவை ரத்து செய்தல், எஃப்.எல்-2 உரிமங்களை ரத்து செய்து குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன், உயா்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தத் தவறிய அலுவலா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் குற்றச்சாட்டு தீவிரமானது. மனமகிழ் மன்றங்களில் உறுப்பினராக உள்ளவா்களுக்கு மட்டுமே மது வழங்க வேண்டும். ஆனால், உறுப்பினா் அல்லாதோருக்கும் மது வழங்கப்படுகிறது என்பது ஏற்புடையதல்ல.

எனவே, மனமகிழ் மன்றங்களில் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். மனுதாரா் குறிப்பிட்டுள்ள 8 மனமகிழ் மன்றங்களிலும் மதுரை மாவட்ட ஆட்சியா் கண்காணிப்பில் வருவாய்க் கோட்டாட்சியா், மதுவிலக்குத் துறையினா், பத்திரப் பதிவுத் துறையினா், காவல் துறையினா் இணைந்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்கு ஒத்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments