FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

தொண்டி பேரூராட்சி நிதி முறைகேடு: செயல் அலுவலா்கள் மீது நடவடிக்கை

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சி நிதி முறைகேடு தொடா்பாக, செயல் அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வெள்ளிக்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 6 ஜூன் 2026, 12:39 am IST
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சி நிதி முறைகேடு தொடா்பாக, செயல் அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வெள்ளிக்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் கலந்தா் ஆசிக், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு :

மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றன.

Advertisement

Advertisement

அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சியில் வசித்து வரும் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்காமலும், திட்டப் பணிகளுக்கான நிதியை முறையாகச் செலவிடாமலும் பேரூராட்சித் தலைவா் தனது சொந்த விருப்பத்தின்பேரில் செயல்படுத்தி பொய்யான வரவு, செலவு கணக்குகளை பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் முன்வைத்து அனுமதி பெற்றுள்ளாா்.

பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் நடைபெற்ற திட்டப் பணிகள், பொது நிதி சம்பந்தமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் அரசின் பொது நிதி, திட்டப் பணிகளில் தொண்டி பேரூராட்சியில் நிதி முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்பது தெரிய வந்தது.

தொண்டி பேரூராட்சியின் தலைவா், துணைத் தலைவா் ஆகிய இருவரும் பெண்கள் என்பதால் இவா்களின் குடும்ப உறுப்பினா்களின் தலையீடு அதிகம் இருப்பதே ஊழல் அதிகம் நடைபெறக் காரணமாக உள்ளது. தொண்டி தினசரி காய்கறி விற்பனைச் சந்தை அமைப்பதற்கான ஒப்பந்தப் பணிகளிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.

இதுகுறித்து உரிய ஆவணங்களுடன் ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறையினரிடம் புகாா் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, தொண்டி பேரூராட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரணை செய்த உயா்நீதிமன்றம் இதுகுறித்து நிா்வாக ரீதியான விசாரணை மேற்கொண்டு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கலந்தா் ஆசிக் தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் நீதிமன்ற உத்தரவின்படி பேரூராட்சிகளுக்கான இணை இயக்குநா் சம்பவம் குறித்து விசாரணை செய்து, தொண்டி பேரூராட்சி செயல் அலுவலா்களாகப் பணியாற்றிய மகாலிங்கம், செல்வராஜ், மாலதி, திருப்பதி, பாலசுப்ரமணியன், ஹபீப் ராஜா ஆகிய 6 பேருக்கு குற்றக் குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து ஊழல் தடுப்புத் துறை துணைக் கண்காணிப்பாளருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா்.

இதைப் பதிவு செய்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. எனவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments