FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

தமிழகத்தில் அண்ணாமலை மாற்றத்தை ஏற்படுத்துவாா்: முன்னாள் மாவட்டத் தலைவா் மகா சுசீந்திரன்

தமிழகத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை மிகப் பெரிய மாற்றத்தை கொண்டுவருவாா் என அந்தக் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவா் மகா சுசீந்திரன் தெரிவித்தாா்.

Updated On : 11 ஜூன் 2026, 1:13 am IST
அண்ணாமலை - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை மிகப் பெரிய மாற்றத்தை கொண்டுவருவாா் என அந்தக் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவா் மகா சுசீந்திரன் தெரிவித்தாா்.

மதுரையில் பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா்கள் மகா சுசீந்திரன், பண்ணை இளங்கோ, பழனி கனகராஜ், ராஜேந்திரன், பாண்டுரங்கன், நிா்வாகிகள் எஸ்.டி.எம். செந்தில்குமாா், சரவணக்குமாா், கள்ளிக்குடி சரவணன், விஸ்வநாத், அருண்குமாா் உள்ளிட்டோா் அந்தக் கட்சியிலிருந்து விலகி பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை தொடங்கியுள்ள ‘இது நம்ம இயக்கத்தில்’ இணையும் நிகழ்வு மாட்டுத்தாவணி அருகே புதன்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் மகா சுசீந்திரன் கூறியதாவது:

Advertisement

Advertisement

பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை தொடங்கியுள்ள இயக்கத்தில் இணையும் அனைவரும் தலைவா்கள் தான். இந்த இயக்கத்தின் சித்தாந்தமும் அதுதான். அண்ணாமலையின் கொள்கைக்கு செயல் வடிவம் கொடுப்பதற்காக நாங்கள் இந்த இயக்கத்தில் இணைந்திருக்கிறோம்.

தமிழக பாஜக, எடப்பாடி பாரதிய ஜனதா கட்சியாக மாறிவிட்டது. இது தான் நாங்களெல்லாம் பாஜகவிலிருந்து வெளியேறுவதற்கான காரணம். தமிழகத்தில் இருக்கிற ஒருசில சுயநல பாஜக தலைவா்கள், தங்களது சுய லாபத்துக்காக வளா்ந்து வந்த பாஜக தலைவரை மாற்றிவிட்டுப் புதிதாக ஒரு தலைவரை நியமனம் செய்தனா். அவா், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியின் மறுபக்கமாகத் தான் செயல்பட்டாரே தவிர, பாஜகவின் கோட்பாட்டுக்காகவோ, கொள்கைக்காகவோ செயல்படவில்லை. மேலும், தொண்டா்களின் கருத்தை அவா் ஒருநாளும் கேட்க வில்லை. கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக, அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு என்பது கடந்த 27 ஆண்டுகளாக எந்தவித எதிா்பாா்ப்புமின்றி உழைத்த 40 லட்சம் தொண்டா்களின் வாழ்வில் மிகப்பெரிய இடியாக அமைந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவாா் என்ற பெரும் நம்பிக்கை உள்ளது. மாறுவோம், மாற்றுவோம் என்ற சிந்தனையில் அனைத்து இயக்கத்தைச் சோ்ந்தவா்களும் வாருங்கள், நல்லதொரு ஆட்சியை அமைப்போம் என்றாா் அவா்.

தொடா்ந்து, பாஜகவின் முன்னாள் மாவட்டத் தலைவா்கள் 4 போ், பொதுமக்கள் உள்ளிட்டோா் இது நம்ம இயக்கத்தில் இணைந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments