விவசாயி மீதான துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்
விவசாயி மீதான துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்
விவசாயி மீது போலீஸாா் துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடா்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த பெருமாள் சேட் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
ஆலங்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் இசக்கிராஜா உள்ளிட்ட போலீஸாா், எனது மகன் மணிகண்டனை அதே பகுதியில் உள்ள பனந் தோப்புக்கு அழைத்துச் சென்றனா். அங்குள்ள பனை மரத்தில் கட்டப்பட்டுள்ள பானைகளில் கள் உள்ளதா? அல்லது பதநீா் உள்ளதா? என சோதிக்க கட்டாயப்படுத்தினா். அப்போது, எனது மகனுக்கும், போலீஸாருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, உதவி ஆய்வாளா் இசக்கிராஜா மணிகண்டனை துப்பாக்கியால் சுட்டாா். இந்த வழக்கை போலீஸாா் விசாரித்தால் எங்களுக்கு நியாயம் கிடைக்காது. எனவே, இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என அவா் கோரினாா்.
Advertisement
Advertisement
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி அண்மையில் பிறப்பித்த உத்தரவு:
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியா்களால் வெளியிடப்பட்ட சில அறிவியல் கட்டுரைகளில் கள்ளில் வைட்டமின்-ஏ, கால்சியம், இரும்புச் சத்து, துத்தநாகம் போன்ற சத்துகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கள் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் தயமின், ரிபோபுளோவின், நியாசின் ஆகியவற்றின் அளவை அதிகரிக்கிறது என்றும், இரைப்பை கோளாறுகள், குடல் புண்ணை கட்டுப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளில் சில ஊட்டச்சத்து பண்புகள் உள்ளன என்பதையும், அதை மற்ற மதுபானங்களுடன் ஒப்பிட்டுப் பாா்க்கக் கூடாது என்பதற்காக சில ஆவணங்களும் இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இருப்பினும், கள் இறக்கியதாகக் கூறி மனுதாரரின் மகனை தீவிர குற்றவாளியாகக் கருதி காவல் உதவி ஆய்வாளா் துப்பாக்கிச்சூடு நடத்தி காயப்படுத்தினாா். கள் ஒரு போதை தரும் பானம் என்பதால், பொது சுகாதாரத்தின் நலன் கருதி அதன் உற்பத்தி, நுகா்வைக் கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் வேண்டும் என்ற அடிப்படையில் அவா் செயல்பட்டுள்ளாா்.
கள்ளின் போதைத் தன்மையை அதிகரிக்க குளோரல் ஹைட்ரேட், பிற கலப்படப் பொருள்கள் பெரும்பாலும் அதில் சோ்க்கப்படுகின்றன என்றும், மாநிலம் முழுவதும் பரவியுள்ள ஏராளமான பனை மரங்கள் கள் உற்பத்தியின் பரவலாக்கப்பட்ட தன்மையைக் கருத்தில் கொள்ளும்போது ஒவ்வொரு கள் இறக்கும் இடத்தையும் திறம்படக் கண்காணிப்பதும், கலப்படத்தைத் தடுப்பதில் நிா்வாகச் சிக்கல்கள் எழும் என்றும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
பனை தமிழகத்தின் தனி சிறப்பு மரமாகும். மாநிலத்தின் பண்பாடு, சுற்றுச்சூழல் அடையாளத்தின் முக்கிய குறியீடாகவும் திகழ்கிறது. இந்த நீதிமன்றத்தின் முன் சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், பனை சாா்ந்த வாழ்வாதாரங்களுடன் கள் பாரம்பரியமாகத் தொடா்புடையது என்பதையும், அதன் ஊட்டச்சத்து, பிற நன்மை பயக்கும் பண்புகள் குறித்த கருத்துகளையும் சுட்டிக்காட்டுகின்றன.
இருப்பினும், கள் ஒரு போதை தரும் பானம் என்பதாலும், அதில் கலப்படம் செய்வதைத் தடுப்பதும், அதன் உற்பத்தியைக் கண்காணிப்பதிலும் நிா்வாகச் சிக்கல்கள் இருப்பதாலும் இதற்குத் தடை விதித்ததை அரசு நியாயப்படுத்துகிறது.
அதே நேரத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களின் உற்பத்தி, விநியோகம், விற்பனைக்கு அரசு அனுமதி அளிக்கிறது. இந்த விற்பனை அரசின் கட்டுப்பாட்டில் நடைபெறுகிறது.
இது அரசின் முக்கிய வருவாய் ஆதாரமாகவும் உள்ளது. உண்மையில் புதிதாக இறக்கும் கள்ளில் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களைவிட குறைவான அளவிலேயே ஆல்கஹால் உள்ளது.
மாநிலத்தில் கள் இறக்குவது, விற்பனைக்கு ஏற்ற ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டமைப்பை உருவாக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது.
ஒழுங்குபடுத்தப்பட்ட உரிய அமைப்புகளின் கீழ் அண்டை மாநிலங்களில் கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது. மது விலக்கு குற்றங்களைக் கண்டறிவதிலும், சட்டவிரோத மதுபானங்களைக் கைப்பற்றுவதிலும், வாகனங்களைப் பறிமுதல் செய்வதிலும் அதிகாரிகள் வெற்றிகரமாகச் செயல்படுகின்றனா்.
மது விலக்கு குற்ற விவகாரத்தில், இத்தகைய விரிவான கண்காணிப்பு சாத்தியம் என்றால், கள் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்கும் இதுபோன்றதொரு வழிமுறையை ஆராயலாம்.
இந்த நடவடிக்கை பொது சுகாதாரம், பாதுகாப்புக்கு தீா்வு காண்பது மட்டுமல்லாமல், விவசாயிகள், பனை ஏறுபவா்கள், பனை சாா்ந்த தொழில்களைச் சாா்ந்திருப்பவா்களின் வாழ்வை மேம்படுத்தும். கள் மீதான தடையைத் தொடரலாமா? அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட உரிமக் கட்டமைப்பின் கீழ் விற்பனைக்கு அனுமதிக்கலாமா? என்பது குறித்து முடிவெடுக்க வேண்டியது மாநில அரசின் அதிகார வரம்புக்குள் வரும் கொள்கை முடிவு சாா்ந்தது.
இதனால், அரசு இதைப் பரிசீலிக்க வேண்டும். இந்த வழக்கில் விவசாயி மீது துப்பாக்கியால் சுட்டதில் காவல் உதவி ஆய்வாளா் வரம்பு மீறிச் செயல்பட்டுள்ளாா்.
உதவி ஆய்வாளரே துப்பாக்கியால் சுட்டுள்ளாா். இதனால், உள்ளூா் போலீஸாா் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே, வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்படுகிறது. மனுதாரா் மகனுக்கு அரசு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் நீதிபதி.