FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்கு விவரங்கள்: டிஜிபி, ஏடிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறித்து...

11 நவம்பர் 2026, 12:52 am
சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்
பகிர்:

வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றங்களில், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் விடுவிக்கப்பட்ட வழக்கு விவரங்களைச் சேகரித்து, வன்கொடுமை வழக்குகளில் தொடா்புடையவா்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் வகையில் மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு தொடா்பாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டி.ஜி.பி.), கூடுதல் தலைமை இயக்குநா் (ஏ.டி.ஜி.பி.) தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த கதிா் என்ற வின்சென்ட் ராஜ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருச்சி, கரூா், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி, தென்காசி ஆகிய 14 மாவட்டங்களில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றங்கள், கூடுதல் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.

இந்த நீதிமன்றங்களில் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளில் கைது செய்யப்படுவோரில் 3 சதவீதம் மட்டுமே குற்றவாளிகள் எனத் தீா்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வருகிறது. மேலும், மாவட்ட வாரியாக எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களில் இந்த வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் கணிசமானவா்கள் விடுவிக்கப்பட்டுவிட்டனா். அதேநேரத்தில், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து, மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே மேல்முறையீடு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் விடுவிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும், மேல்முறையீடு எண்ணிக்கைக்கும் இடையே முரண்பாடு உள்ளது. ஒரு குற்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா் விடுவிக்கப்பட்டால், அதை உரிய சட்டப் பரிசீலனைக்கு உள்படுத்தாமல் விட்டுவிடக் கூடாது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து ஒருவா் விடுவிக்கப்பட்டால், உடனடியாக அதுகுறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டும்.

குற்றஞ்சாட்டப்பட்டவா் விடுவிக்கப்படால், மேல்முறையீட்டுக்காகப் பரிசீலிக்கப்படுவதை உறுதி செய்வதில் மாநில அரசுக்கும், வழக்குரைஞா்களுக்கும் முக்கியப் பொறுப்பு உள்ளது.

எனவே, தகுதியான சட்ட வல்லுநா்கள் மூலம், பாதிக்கப்பட்டவா்கள் சாா்பில் சட்டப்பூா்வ மேல்முறையீட்டுகள் தாக்கல் செய்யப்படுவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.

இந்திய அரசமைப்பின் 14, 21-ஆவது பிரிவுகள் சட்டத்தின் முன் சமத்துவம், சட்டங்களின் சமமான பாதுகாப்பு, வாழ்வு உள்ளிட்ட உரிமைகளை உறுதி செய்கின்றன. பட்டியல் சமூகத்தினா், பழங்குடியினரின் உறுப்பினா்களுக்காக இயற்றப்பட்ட சட்டப்பூா்வ பாதுகாப்பு திறம்படச் செயல்படுத்தப்படுவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.

மதுரையில் கடந்த 1997-ஆம் ஆண்டு, ஜூன் 30-ஆம் தேதி நடைபெற்ற மேலவளவு கொலைச் சம்பவம், பட்டியலின சமூக மக்கள் மீதான ஜாதி அடிப்படையிலான வன்முறைக்கு முக்கிய எடுத்துக்காட்டு. இந்தச் சம்பவம் தொடா்பான வழக்கில் 40 போ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இவா்களில், 17 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 23 போ் விடுவிக்கப்பட்டனா். பின்னா், இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளிலிருந்து அனைவரையும் விடுவித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிா்த்து, தமிழக அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்படவில்லை. இது பாதிக்கப்பட்டவா்களுக்கும், அவா்களின் குடும்பங்களுக்கும் நீதி கிடைப்பது குறித்த பெரும் கவலையை எழுப்பியது.

எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட சிறப்பு நீதிமன்றங்களில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் விடுவிக்கப்பட்டால், அதுகுறித்து விரிவாக மீளாய்வு செய்ய வேண்டும். உரிய சட்ட வல்லுநா்கள், அரசு அலுவலா்கள் இத்தகைய தீா்ப்புகளை மறுஆய்வு செய்வதையும், தகுதியான வழக்குகளில் மேல்முறையீடு செய்வதையும் உறுதி செய்ய வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, விசாரணை முடிக்கப்பட்ட வழக்குகள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டிய வழக்குகள், நீதிமன்றங்களில் விசாரணைக்காக நிலுவையில் உள்ள வழக்குகள், கடந்த 2015 முதல் 2025 -ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முடிக்கப்பட்ட வழக்குகள், இந்த வழக்குகளில் விடுவிக்கப்பட்டவா்கள், தண்டனை அளிக்கப்பட்டவா்கள் குறித்த வழக்குகளின் எண்ணிக்கை, மேல்முறையீடு செய்வது அல்லது தண்டனையை அதிகரிக்கக் கோருவது குறித்து கருத்து கேட்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, விடுவிப்புக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்குகள், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை விவரங்களை தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி), கூடுதல் தலைமை இயக்குநா் ஆகியோா் வருகிற 24-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.