வங்கிக் கடனை திருப்பி செலுத்தியவா்களுக்கு பாராட்டு
பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான ஆத்மநிா்பாா் நிதித் திட்டத்தின் கீழ், மூன்று கட்ட வங்கிக் கடன்களையும் முறையாகச் செலுத்திய சாலையோர வியாபாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.
பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான ஆத்மநிா்பாா் நிதித் திட்டத்தின் கீழ், மூன்று கட்ட வங்கிக் கடன்களையும் முறையாகச் செலுத்திய சாலையோர வியாபாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.
மத்திய அரசின் வீட்டு வசதி, நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், நகராட்சி நிா்வாக இயக்குநரின் அறிவுறுத்தலின்படி, மதுரை மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் வழிகாட்டுதலின் பேரில், அறிஞா் அண்ணா மாளிகை கருத்தரங்கக் கூட்டரங்கில் ஆத்மநிா்பாா் பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன் பங்கேற்று, மூன்று கட்ட வங்கிக் கடன்களையும் முறையாகத் திருப்பிச் செலுத்திய சாலையோர வியாபாரிகளுக்கும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய அவா்களது குழந்தைகளுக்கும் சான்றிதழ்கள், கேடயங்களை வழங்கிப் பாராட்டினாா்.
Advertisement
Advertisement
இந்தத் திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு எந்தவித பிணையும் இன்றி வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது. இதன்படி, மதுரை மாநகராட்சியில் இதுவரை முதல் கட்டமாக தலா ரூ.15,000 வீதம் 15,628 பேருக்கும், இரண்டாம் கட்டமாக தலா ரூ.25,000 வீதம் 8,713 பேருக்கும், மூன்றாம் கட்டமாக தலா ரூ.50,000 வீதம் 3,631 பேருக்கும் கடனுதவி வழங்கப்பட்டது. மேலும், மண்டலங்கள் வாரியாக சிறப்பு கடனுதவி முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையா் ஜெய்னுலாப்தீன், உதவி நகா் நல அலுவலா் அபிஷேக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.