FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

மதுரை நகைக் கடை கொள்ளை: கைதான இளைஞரிடமிருந்து 6.2 கிலோ நகைகள் மீட்பு

17 நவம்பர் 2026, 5:01 am
மதுரை நகைக் கடை திருட்டு - DNS
பகிர்:

மதுரை நகைக் கடையிலிருந்து தங்க நகைகளைக் கொள்ளையடித்தது தொடா்பாக திங்கள்கிழமை கைது செய்யப்பட்ட இளைஞரிடமிருந்து 6.2 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன.

மதுரை பழங்காநத்தம் புறவழிச் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக் கடையில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை சுமாா் 15 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையா் எஸ். ராஜேந்திரன் உத்தரவின்பேரில், மாநகரத் தெற்கு காவல் துணை ஆணையா் இனிகோ திவ்யன் தலைமையில் தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டன.

கண்காணிப்பு கேமரா பதிவுகள், போலீஸாரின் விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில் மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் நிஷாந்த் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இவரது தந்தை சுரேஷ், நிஷாந்தின் தோழியும், யூடியூபருமான மீனாட்சி ஆகியோரும் இந்தக் கொள்ளைக்கு உடந்தையாக இருந்ததும் கண்டறியப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, சுரேஷ், மீனாட்சி ஆகிய இருவரையும் கடந்த சனிக்கிழமை தனிப் படை போலீஸாா் கைது செய்தனா்.

மீனாட்சி அளித்த தகவலின் அடிப்படையில், மாடக்குளம் வயல்வெளியில் நிஷாந்த் பதுக்கி வைத்திருந்த 5.5 கிலோ எடையிலான தங்க நகைகளை போலீஸாா் மீட்டனா்.

தலைமறைவான நிஷாந்தை தனிப் படை போலீஸாா் தீவிரமாகத் தேடிவந்தனா். இந்த நிலையில், தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேயுள்ள சேஷம்பட்டி பகுதியில் ஆம்னி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த நிஷாந்தை அதியமான்கோட்டை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். இதையடுத்து, மதுரை எஸ்.எஸ். காலனி போலீஸாா் சென்று நிஷாந்தை மதுரைக்கு அழைத்து வந்தனா்.

அவரிடம் தனிப்படை போலீஸாா் நடத்திய விசாரணையில், மதுரை விளாச்சேரி கோபாலிபுரம் மலை அடிவாரம் பகுதியில் நகைகளைப் பதுக்கி வைத்திருப்பதாக நிஷாந்த் தெரிவித்தாா். இதையடுத்து, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை போலீஸாா் மீட்டனா்.

கோபாலிபுரம் மலை அடிவாரம் பகுதியிலிருந்து 6.2 கிலோ எடையிலான நகைகள் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். ஏற்கெனவே, மீனாட்சி அடையாளம் காட்டியதன்பேரில் மாடக்குளம் பகுதியிலிருந்து 5.5 கிலோ நகைகள் மீட்கப்பட்ட நிலையில், மொத்தம் 11.7 கிலோ நகைகள் இதுவரை மீட்கப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடா்பாக தனிப்படை போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகினறனா். ஏற்கெனவே கைதான யூடியூபா் மீனாட்சியின் தாயிடமும் போலீஸாா் விசாரணை நடத்தினா்.