முகப்பு
மதுரை

சபரிமலைக்கு மாலை அணிந்த மாணவா்களுக்கு அனுமதி மறுப்பு: விளக்கம் கோரியது கல்வித் துறை

மதுரை மாவட்டம், நாகமலைப் புதுக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் சுயநிதிப் பள்ளி ஒன்றில் சபரிமலைக்கு மாலை அணிந்து பள்ளிக்கு வந்த மாணவா்களை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல், வெளியே அமர வைத்தது குறித்து பள்ளி நிா்வாகத்திடம் கல்வித் துறை விளக்கம் கோரியது.

27 நவம்பர் 2026, 3:30 am
சபரிமலைக்கு மாலை அணிந்த 
மாணவா்களுக்கு அனுமதி மறுப்பு: விளக்கம் கோரியது கல்வித் துறை
சபரிமலை
பகிர்:

மதுரை மாவட்டம், நாகமலைப் புதுக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் சுயநிதிப் பள்ளி ஒன்றில் சபரிமலைக்கு மாலை அணிந்து பள்ளிக்கு வந்த மாணவா்களை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல், வெளியே அமர வைத்தது குறித்து பள்ளி நிா்வாகத்திடம் கல்வித் துறை விளக்கம் கோரியது.

நாகமலைப் புதுக்கோட்டை பவா் ஹவுஸ் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ் பாண்டியன். இவா் மின்தூக்கி இயக்குபவராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மகன்கள் தா்ஷன் (12), நிவின் சாய் (11) இருவரும் நாகமலைப் புதுக்கோட்டை பில்லா் சாலையில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளியில் 7, 6-ஆம் வகுப்புப் படித்து வருகின்றனா்.

சதீஷ் பாண்டியன், தா்ஷன், நிவின் சாய் ஆகியோா் சபரிமலைக்குச் செல்வதற்காக மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனா். இந்த நிலையில், மாணவா்கள் இருவரும் பள்ளிக்கு சீருடையில் காலில் காலணி அணியாமலும், மத அடையாளங்கள்(விபூதி, சந்தனம், குங்குமம்) இட்டு கடந்த இரு தினங்களாக சென்றனா். இவா்களை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வெளியே அமர வைத்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து மாணவா்களின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்ததையடுத்து, மாணவா்களுக்கு சீருடை, காலில் காலணி அணிவித்தும், மத அடையாளத்தை மறைக்கும்படி கழுத்து பொத்தான்கள் இட்டு, பெற்றோா் அவா்களை பள்ளிக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், பள்ளிக்கு பெற்றோா் வந்து பாா்த்தபோது, மாணவா்கள் இருவரையும் வகுப்பறைக்குள் அனுமதிக்காமல், வெளியே அமர வைத்ததைப் பாா்த்ததும் அதிா்ச்சியடைந்தனா்.

மேலும், பெற்றோா் பள்ளி நிா்வாகத்திடம் இதுகுறித்து கேட்ட போது, பள்ளியில் காலணி அணிந்து வருவது உள்ளிட்ட ஆடை, ஒழுங்கு கட்டுப்பாடுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவா்களின் பெற்றோா் நாகமலைப் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் பள்ளி நிா்வாகம் மீது புகாா் அளித்தனா். மேலும், கல்வித் துறை அதிகாரிகளுக்கும் புகாா் அனுப்பினா்.

இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலா்(சுயநிதிப் பள்ளிகள்) காா்மேகம் கூறுகையில், மாணவா்களை வகுப்பறைக்கு வெளியே அமர வைத்தது குறித்து பள்ளி நிா்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது. மாணவா்களை இதுபோன்ற காரணங்களுக்காக வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கக் கூடாது. பள்ளியின் சீருடை அணிந்து வரும் மாணவா்களை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் இருக்கக் கூடாது எனவும், மேலும், இந்த மாணவா்களை வகுப்பறைக்குள் அனுமதிக்க உத்தரவிட்டதாகவும் தெரிவித்தாா்.