உ.பி.யில் 5 வயது சிறுவன் வகுப்பறைக்குள் பூட்டப்பட்ட விவகாரம்: 2 ஆசிரியர்கள் இடைநீக்கம்!
உ.பி.யில் 5 வயது சிறுவன் வகுப்பறைக்குள் பூட்டப்பட்ட சம்பவத்தில், 2 ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து...

உ.பி.யில் 5 வயது சிறுவன் வகுப்பறைக்குள் பூட்டப்பட்ட சம்பவத்தில், 2 ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
மாவட்டத் தொடக்கக் கல்வி அதிகாரி மனிஷ் குமார் சிங் கூறுகையில், நக்ரா மண்டலக் கல்வி அதிகாரி ரத்ன சங்கர் பாண்டே மூலம் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார். அந்த விசாரணையில், பொறுப்புத் தலைமை ஆசிரியை அனாமிகா மௌரியா மற்றும் ஆசிரியை அந்திமா யாதவ் ஆகியோர், வகுப்பறைகளைச் சரியாகச் சரிபார்க்காமல் பள்ளியைப் பூட்டிவிட்டுச் சென்றது கண்டறியப்பட்டது.
"இதனாலேயே சிறுவன் உள்ளே சிக்கிக்கொண்டான். இந்தச் சம்பவம், அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்வதில் காட்டிய தீவிர கவனக்குறைவைக் காட்டுகிறது. எனவே, இரு ஆசிரியர்களும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள். இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடத்த ரஸ்ரா தொகுதி கல்வி அதிகாரி ஓம் பிரகாஷ் திவாரி நியமிக்கப்பட்டுள்ளார்" என்றும் அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
உத்தர பிரதேச மாநிலம், பாலியாவில் உள்ள திர்னாய் மௌலாராய் தொடக்கப் பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்குப் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர், வியாழக்கிழமை வகுப்பறைக்குள் 5 வயது சிறுவன் இருப்பதைக் கவனிக்காமல் அறையின் கதவைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார். அறைக்குள் சிக்கிக்கொண்ட சிறுவன் நீண்ட நேரமாக அழுதபடியே இருந்துள்ளான்.
அப்போது பள்ளியில் இருந்த தண்ணீர் சுத்திகரிப்பான் அருகே கைகளைக் கழுவச் சென்ற பெண் ஒருவர், சிறுவனின் அழுகுரலைக் கேட்டு கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அங்கு வந்த கிராம மக்கள் பூட்டை உடைத்துச் சிறுவனைப் பத்திரமாக மீட்டனர். இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுவன் எப்படி அறைக்குள் பூட்டப்பட்டான் என்று அவர்கள் கேள்வி எழுப்பியதால், பள்ளி நிர்வாகத்தினருக்கும் கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து இந்த சம்பவத்தில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நக்ரா மண்டலக் கல்வி அலுவலர் ரத்ன சங்கர் பாண்டேவுக்கு, மாவட்டத் தொடக்கக் கல்வி அதிகாரி மனிஷ் குமார் சிங் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.