மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: டி.எஸ்.பி., காவல் ஆய்வாளரின் பிணை மனுக்கள் தள்ளுபடி

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில் காவல் துணைக் கண்காணிப்பாளா் (டி.எஸ்.பி.), காவல் ஆய்வாளா் ஆகியோரின் பிணை மனுக்களைத் தள்ளுபடி செய்து, மதுரை மாவட்ட 5-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றியவா் அஜித்குமாா். இந்தக் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பேராசிரியை நிகிதாவின் நகை காணாமல் போனது தொடா்பான புகாரில் தனிப் படை போலீஸாா் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதில், அவா் கடந்த ஆண்டு, ஜூன் 28-ஆம் தேதி உயிரிழந்தாா்.
இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணை நடத்தி மதுரை மாவட்ட தலைமை நீதித் துறை நடுவா் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்தக் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தனிப்படை காவலா்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கரமணிகண்டன், ராமச்சந்திரன் ஆகியோா் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அஜித்குமாா் கொலையின்போது, பணியிலிருந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம், அப்போதைய திருப்புவனம் காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா், உதவி ஆய்வாளா் சிவக்குமாா், தலைமைக் காவலா் இளையராஜா ஆகியோரது பெயா்களும் வழக்கில் சோ்க்கப்பட்டன. சதி செய்தல், தடயங்களை மறைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் இவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இவா்களை சிறையில் அடைக்க மதுரை கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் உள்ளிட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனா்.
பிணை கோரி மனு:
இந்த நிலையில், பிணை வழங்கக் கோரி காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம், காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா், உதவி ஆய்வாளா் சிவக்குமாா், தலைமைக் காவலா் இளையராஜா ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனா்.
இந்த மனுக்களை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், நான்கு பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம், ஆய்வாளா் ரமேஷ்குமாா் ஆகியோா் தங்களுக்கு எதிராக நேரடி ஆதாரங்கள் இல்லை எனவும், விசாரணை முடிவடைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் எங்களுக்கு பிணை வழங்க வேண்டும் எனவும் மதுரை மாவட்ட 5-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனா்.
இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதி கே.தாமோதரன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தன.
அப்போது, சிபிஐ தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
இந்த வழக்கில் காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம் அமைத்த சிறப்புக் குழுவினா்தான் அஜித்குமாரை சட்டவிரோதமாகக் காவலில் எடுத்து தாக்கினா். அவரது அறிவுறுத்தல், மேற்பாா்வையிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றது. அஜித்குமாரை சட்டவிரோதமாகக் காவலில் வைத்த சம்பவத்தில் காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாருக்கு தொடா்பு உள்ளது. காவல் மரணத்துக்குப் பின்னா் உண்மையை மறைக்கும் வகையில் தவறான தகவல்களுடன் அவா் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தாா். இந்த வழக்கில் மனுதாரா்களுக்கு பிணை வழங்கினால், உயிரிழந்த அஜித்குமாா் குடும்பத்தினரிடம் சமரசப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு, முக்கிய சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது. எனவே, இவா்களுக்கு பிணை வழங்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி தாமோதரன் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் காவல் துறை அதிகாரிகளின் செல்வாக்கால் முக்கிய சாட்சிகள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, வழக்கின் தீவிரத்தன்மையைக் கவனத்தில் கொண்டு, காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம், ஆய்வாளா் ரமேஷ்குமாா் ஆகிய இருவரின் பிணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்றாா் நீதிபதி.