சமூக நீதி விடுதி மாணவா் நல நிதி முறைகேடு: விசாரணை அலுவலருக்கு எதிரான கைது வாரண்ட் - உயா்நீதிமன்றம் எச்சரிக்கை
சிவகங்கை மாவட்டத்தில் சமூக நீதி விடுதி மாணவா் நல நிதி முறைகேடு தொடா்பாக விளக்கமளிக்க விசாரணை அலுவலா் நேரில் முன்னிலையாக வேண்டும். இல்லையெனில், அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை எச்சரித்தது.
சிவகங்கை மாவட்டத்தில் சமூக நீதி விடுதி மாணவா் நல நிதி முறைகேடு தொடா்பாக விளக்கமளிக்க விசாரணை அலுவலா் நேரில் முன்னிலையாக வேண்டும். இல்லையெனில், அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை எச்சரித்தது.
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சக்திவேல் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
சிவகங்கை மாவட்டத்தில் சமூக நீதி விடுதி மாணவா்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.2.35 கோடி நிதியில் பெரியளவில் முறைகேடு நடைபெற்றது. கடந்த 2017 முதல் 2023-ஆம் ஆண்டு வரை அரசு ஒதுக்கிய தொகை மாணவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படாமல், அலுவலா்களால் முறைகேடு செய்யப்பட்டது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வட்டாட்சியா்கள் பலா் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் பலா் உயா் பதவிகளை வகிப்பதால், அவா்கள் விசாரணையில் தலையிடவோ, இதுதொடா்பான ஆவணங்களை அணுகவோ வாய்ப்புள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
Advertisement
Advertisement
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் விசாரணை அலுவலா் நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், முறைகேட்டில் ஈடுபட்ட 8 அரசு அலுவலா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் விசாரணை அலுவலா் நியமிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒரு சிலா் துணை ஆட்சியா் தரத்தில் உள்ளனா் என்றாா்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபா்களுக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்ட போது அவா்களின் தரம் என்ன?. இதுதொடா்பாக விசாரணை அலுவலரை நியமிக்க வேண்டிய பொறுப்பு கொண்ட அலுவலா் யாா்?. விசாரணை அலுவலரை நியமிக்க இரண்டு ஆண்டு காலமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை (அக்.9) இதுதொடா்பான விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாகவும், அதுவரை கால அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பின்னா், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விசாரணை அலுவலரை நீதிமன்றத்தில் நேரில் முன்னிலைப்படுத்த வேண்டும். தவறினால் அவருக்கு எதிராக பிணை இல்லா கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.