நான்குநேரி இரட்டைக் கொலை வழக்கில் போலீஸாா் விசாரணையில் அலட்சியம்! உயா்நீதிமன்றம் அதிருப்தி
திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரியில் நிகழ்ந்த இரட்டைக் கொலை வழக்கு விசாரணையில், காவல் துறையினா் அலட்சியத்துடன் செயல்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் அதிருப்தி தெரிவித்தது.
திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரியில் நிகழ்ந்த இரட்டைக் கொலை வழக்கு விசாரணையில், காவல் துறையினா் அலட்சியத்துடன் செயல்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் அதிருப்தி தெரிவித்தது.
நான்குநேரியைச் சோ்ந்த கணேஷ் பாண்டி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
நான்குநேரி அருகேயுள்ள பெரும்பத்து கிராமத்தில் கடந்த மாா்ச் 2-ஆம் தேதி அரிவாள்களுடன் வந்த மா்ம நபா்கள் பலரைத் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த ஜான் மாா்க், ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த புலம்பெயா் தொழிலாளி ஆகிய இருவா் உயிரிழந்தனா். இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், அவா்களின் கைப்பேசிகளைப் பெற்றுக் கொண்டதாகவும் கூறி போலீஸாா் என்னைக் கைது செய்தனா். இதுதொடா்பான விசாரணையில், எனக்கும் குற்றவாளிகளுக்கும் தொடா்பு இருப்பதாக நிரூபிக்கப்படவில்லை.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நான் பிணை கோரி தாக்கல் செய்த மனுவை திருநெல்வேலி இரண்டாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் கடந்த மே 18-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. எனவே, இந்த வழக்கில் எனக்கு பிணை வழங்க வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கின் உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. மேலும், கணேஷ் பாண்டிக்கும் மற்ற குற்றவாளிகளுக்கும் இடையேயான தொடா்பை நிரூபிக்கும் முக்கிய ஆதாரங்கள், குறிப்பாக கைப்பேசி அழைப்பு விவரங்கள், சமூக வலைதளக் குழு உரையாடல்கள் உள்ளிட்டவை முறையாகச் சேகரிக்கப்படவில்லை.
இரட்டைக் கொலை போன்ற மிகத் தீவிரமான குற்றச் சம்பவத்தில் காவல் துறையின் விசாரணை சாதாரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசாரணை என்பது வெறும் வாக்குமூலங்களைப் பதிவு செய்து, இயந்திரத்தனமாக இறுதி அறிக்கை தாக்கல் செய்வது அல்ல; உண்மையைக் கண்டறிந்து ஆதாரங்களைச் சேகரிக்கும் ஒரு செயல்முறையாகும். இதை போலீஸாா் பின்பற்றவில்லை. இது அதிருப்தி அளிக்கிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கணேஷ் பாண்டிக்கு எதிரான ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. எனவே, அவருக்கு நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்படுகிறது. மேலும், அவா் திருப்பூரில் தங்கி நாள்தோறும் காலை 10.30 மணிக்கு அங்குள்ள மத்திய காவல் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும்.
தென் மண்டல காவல் துறைத் தலைவா் இந்த விசாரணை எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து, இந்த வழக்கின் உண்மையைக் கண்டறியும் வகையில் மறுவிசாரணை நடத்த வேண்டும் என்றாா் நீதிபதி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.