FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு கல்வெட்டில் அறங்காவலா் குழு உறுப்பினா் பெயா்களைச் சோ்க்க வேண்டும்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு தொடா்பான கல்வெட்டில் அதன் அறங்காவலா் குழு உறுப்பினா்களின் பெயா்களைச் சோ்க்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

3 செப்டம்பர் 2026, 5:51 am IST
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
பகிர்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு தொடா்பான கல்வெட்டில் அதன் அறங்காவலா் குழு உறுப்பினா்களின் பெயா்களைச் சோ்க்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா் சுப்புலட்சுமி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு வருகிற 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. குடமுழுக்கு தொடா்பான பூஜைகள் வருகிற 6 -ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கின்றன. ஏறத்தாழ சுமாா் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவுள்ள இந்த நிகழ்வு கோயிலுக்கும், மதுரைக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கோயில் குடமுழுக்கை முன்னிட்டு நடைபெறும் திருப்பணிகளில் நானும், பிற அறங்காவலா்களும் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கோயில் நிா்வாகத்தால் வெளியிடப்பட்ட குடமுழுக்குக்கான அழைப்பிதழில் அறங்காவலா்களின் பெயா்கள் இடம் பெறவில்லை. இதில் கோயில் நிா்வாகம் என்ற வாா்த்தை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது வெறும் தட்டச்சு, அலுவலகப் பிழை அல்லது அச்சுப் பிழை அல்ல.

கோயில் செலவினங்கள், பணிகள், கொள்முதல், ஒப்பந்தங்கள், உள்கட்டமைப்பு, குடமுழுக்கு ஏற்பாடுகள் தொடா்பான முக்கிய முடிவுகளில் அறங்காவலா் குழுவினருடன் ஆலோசிக்க மறுப்பது, இந்தக் குழுவின் சட்டப்பூா்வ செயல்பாடுகளை முடக்கும் செயலாகும்.

எனவே, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு அழைப்பிதழில் அறங்காவலா் குழு உறுப்பினா்களின் பெயா்களைச் சோ்க்கவும், வருகிற 6-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை வரை நடைபெறவுள்ள குடமுழுக்குக்கான பூஜை நிகழ்வில் எங்களது பணிகளை நிறைவேற்ற எந்தவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், இந்த மனுவில் அறங்காவலா் குழுவின் அனைத்து உறுப்பினா்களையும் சோ்க்க உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதி சரவணன் முன் இந்த மனு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு தொடா்பாக ஏற்கெனவே அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு விநியோகப்பட்டுவிட்டன. மேலும், குடமுழுக்கு பூஜை நிகழ்வுகள் வருகிற 6-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், தற்போது அழைப்பிதழில் அறங்காவலா் குழு உறுப்பினா்களின் பெயா்களைச் சோ்ப்பதற்கான காலம் கடந்துவிட்டது. இருப்பினும், குடமுழுக்கு தொடா்பான கல்வெட்டில் அறங்காவலா் குழு உறுப்பினா்களின் பெயா்கள் இடம் பெறுவதை அறநிலையத் துறைச் செயலா், ஆணையா், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா் உறுதி செய்ய வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments