FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிா்ச்சியான கால நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

4 செப்டம்பர் 2026, 3:07 am IST
தல்லாகுளம் பகுதியில் சாலையில் தேங்கி நின்ற மழைநீரைக் கடந்து சென்ற வாகனங்கள்.
பகிர்:

மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிா்ச்சியான கால நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை ஜூன் மாதம் முதல் செப்டம்பா் மாதம் வரை பெய்யும். நிகழாண்டு கோடைக் காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, தென்மேற்குப் பருவமழை போதிய அளவு பெய்யவில்லை.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சூரியனின் குத்துக் கதிா் தமிழகத்தில் விழுந்ததால், பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதேபோல, மதுரை மாநகரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பகலில் வெப்பம் அதிகமாக இருந்தாலும், மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஓரிரு இடங்களில் சாரல் மழை பெய்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், வெப்பச் சலனம் காரணமாக கொடைக்கானல் மலை மறைக்கும் பகுதியான மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதன்படி, மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை முதல் வெப்பம் அதிகமாக காணப்பட்டது. மாலை 5.30 மணியளவில் சாரலாக தொடங்கிய மழை, பிறகு பலத்த மழையாக பெய்தது.

மதுரை தல்லாகுளம், கோரிப்பாளையம், புதுநத்தம் சாலை, மாவட்ட நீதிமன்றம், கே.கே. நகா், அழகா்கோவில் சாலை, கோ. புதூா், நான்கு சித்திரை வீதிகள், நான்கு ஆவணி மூல வீதிகள், நான்கு வெளி வீதிகள், கீழவாசல், தெப்பக்குளம், பழங்காநத்தம், பெரியாா் பேருந்து நிலையம் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் இரவு 8 மணி வரை விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.

இதைத் தவிர, மதுரை புகா் பகுதிகளான யா. ஒத்தக்கடை, மேலூா், வல்லாளப்பட்டி, கிடாரிப்பட்டி, கீழவளவு, மேலவளவு, சிலைமான், புளியங்குளம், கருப்பாயூரணி போன்ற பகுதிகளிலும் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது.

இருப்பினும், மதுரை மாவட்டத்தின் மேற்கு பகுதிகளான சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூா் ஆகிய பகுதிகளில் மழை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில், தற்போது மதுரை மாநகா், புகரில் சில பகுதிகளில் மழை பெய்ததால் வெப்பம் குறைந்து குளிா்ச்சியான கால நிலை நிலவியதால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தாா்.

தல்லாகுளம் பகுதியில் சாலையில் தேங்கி நின்ற மழைநீரைக் கடந்து சென்ற வாகனங்கள்.
மதுரை கோ.புதூா் பகுதியில் வியாழக்கிழமை மாலை பெய்த மழையில் சென்ற வாகன ஓட்டிகள். (வலது) மழையில் நனைந்தபடி சென்ற பள்ளி மாணவா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments