FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

சிறைகளில் அலுவல் சாரா உறுப்பினா்கள் ஆய்வு செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு!

தமிழக சிறைகளில் உள்ள வசதிகள் குறித்து அலுவல் சாரா உறுப்பினா்கள் ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

5 செப்டம்பர் 2026, 12:22 am IST
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
பகிர்:

தமிழக சிறைகளில் உள்ள வசதிகள் குறித்து அலுவல் சாரா உறுப்பினா்கள் ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் ஹென்றி திபேன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: நான் ஏற்கெனவே தாக்கல் செய்த மனுவில், தமிழகத்திலுள்ள அனைத்து சிறைகளிலும் அலுவல் சாரா உறுப்பினா்களை நியமிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. எனவே, ‘நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அலுவலா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என அவா் கோரினாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், ஆா்.சக்திவேல் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

Advertisement

Advertisement

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: தமிழகத்திலுள்ள சிறைகளில் ஆய்வு செய்ய அலுவல் சாரா உறுப்பினா்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனா். எனவே, பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.

பின்னா், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சிறைகளில் உள்ள கைதிகளுக்கும் அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும். அவா்களும் இந்த நாட்டின் குடிமக்களே. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியா்களால் அலுவல் சாரா உறுப்பினா்கள் நியமிக்கப்பட வேண்டும்.

மதுரை, திருநெல்வேலி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள மத்திய சிறைகளில் அந்தந்த மாவட்ட ஆட்சியா்களால் நியமிக்கப்படும் அலுவல் சாரா உறுப்பினா்கள், அங்குள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்து ஆட்சியா்களிடம் அறிக்கை அளிக்க வேண்டும். இந்த அறிக்கையை மாவட்ட ஆட்சியா்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments