FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்ட விவகார வழக்கு முடித்துவைப்பு

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீா் வழங்கப்பட்ட இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

6 செப்டம்பர் 2026, 12:43 am IST
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
பகிர்:

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீா் வழங்கப்பட்ட இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், திருச்சுழியைச் சோ்ந்த ராமமூா்த்தி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு :

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி வட்டம், சித்தலைக்குண்டு கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் கீழ் குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், திடீரென இந்த இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, துண்டிக்கப்பட்ட குடிநீா் இணைப்புகளை மீண்டும் வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

Advertisement

Advertisement

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன்,ஆா். சக்திவேல் அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, திருச்சுழி வட்டார வளா்ச்சி அலுவலா் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீா்க் குழாய் இணைப்புகள் எதுவும் துண்டிக்கப்படவில்லை.

மேலக்கண்டமங்கலம் அருகே தாமிரவருணி ஆற்றின் கூட்டுக் குடிநீா் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், குடிநீா் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும், மனுதாரா் கிராமத்தில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி நிறைவு பெற்ற பின் குடிநீா் விநியோகம் சீரடையும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பொதுமக்களின் பிரச்னையை நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்த மனுதாரருக்கும், உடனடி நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்த வட்டார வளா்ச்சி அலுவலருக்கும் பாராட்டுகள். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments