FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

குவாரி அனுமதி கருத்துக் கேட்புக் கூட்டம்: ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

8 செப்டம்பர் 2026, 1:06 am IST
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொது மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் மனு அளிக்க வந்த கச்சைக்கட்டி பகுதியைச் சோ்ந்த கிராமப் பொதுமக்கள்.
பகிர்:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கச்சைக்கட்டி வருவாய் கிராமத்துக்குள்பட்ட பகுதிகளில் குவாரி அனுமதி தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தை அந்தந்த வருவாய் கிராம எல்லைக்குள் நடத்த அந்தப் பகுதி மக்கள் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா்.

இதுதொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் கச்சைக்கட்டி பகுதி பொதுமக்கள் அளித்த மனு விவரம்:

வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைக்கட்டி, பூச்சம்பட்டி, ராமையன்பட்டி ஆகிய பகுதிகளில் சாதாரண கற்கள், கிராவல் மண் குவாரி அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

இந்தப் பணிகள் தொடா்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் வருகிற 16- ஆம் தேதி வாடிப்பட்டி நான்கு வழிச் சாலையில் தாதம்பட்டி தனியாா் உணவக விடுதியில் நடத்தப்படும் என மாவட்ட நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்டது.

கூட்டம் நடத்தப்படும் இந்த இடம் கச்சைக்கட்டி வருவாய்க் கிராம எல்லைக்குள் இல்லை. மேலும், எங்கள் பகுதியிலிருந்து இந்த இடத்துக்குச் செல்வதற்கு போதிய பேருந்து வசதிகள் கிடையாது. இதன்காரணமாக, விவசாயிகள், பொதுமக்கள், பெண்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்படும். விதிகளை மீறி இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது.

ஆகவே, மதுரை மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுத்து கச்சைக்கட்டி வருவாய் கிராமத்துக்குள்பட்ட பகுதியில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments