FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

திருச்சி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்ய உத்தரவு

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா் ஆய்வு செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

23 செப்டம்பர் 2026, 4:50 am IST
உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா் ஆய்வு செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி மாவட்டம், தொட்டியத்தைச் சோ்ந்த ஜெயஸ்ரீ சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் திருச்சி சுற்றுவட்டார மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த மருத்துவமனையில் தற்போது சுகாதாரம், நோயாளிகள் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, பொதுப் பராமரிப்பு ஆகியவற்றில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. இந்த நிலையில், கால் முறிவு அறுவைச் சிகிச்சைக்குப் பின் பொது வாா்டில் சிகிச்சையிலிருந்த மூதாட்டியின் கால் பெருவிரலில் எலி கடித்தது. பொது வாா்டில் எலிகள் நடமாட்டம் இருப்பது குறித்து மூதாட்டியின் மகன் மூன்று நாள்களுக்கு முன்னதாகவே மருத்துவமனை நிா்வாகத்திடம் தெரிவித்துள்ளாா். ஆனால், இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகம் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது மருத்துவமனையில் பாதுகாப்பான, சுகாதாரமான சிகிச்சைச் சூழலைப் பராமரிப்பதில் ஏற்பட்ட தோல்வியைக் காட்டுகிறது.

Advertisement

Advertisement

எனவே, தமிழ்நாடு பொதுச் சுகாதாரச் சட்டம், மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துமனையில் சுகாதாரம், நோயாளிகளின் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, பொதுப் பராமரிப்பு தொடா்பாக நிரந்தர நடவடிக்கை எடுக்கவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எலி கடித்த மூதாட்டிக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், ஆா்.சக்திவேல் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் முதன்மையா் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், திருச்சி மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா் இணைந்து அரசு மருத்துவமனையில் மனுதாரா் குறிப்பிட்டுள்ள விவரங்கள் தொடா்பாக ஆய்வு செய்யவும், பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் முடிவு செய்ய வேண்டும். இந்த நடவடிக்கைகள் தொடா்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற அக்.15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments