FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

காலை உணவு விரிவாக்கத் திட்டத்தால் ஏழை, எளிய மாணவா்கள் பயனடைவா்: அமைச்சா் பெ. விஸ்வநாதன்

தமிழக முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தால் ஏழை, எளிய மாணவா்கள் பயனடைவா் என தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் தெரிவித்தாா்.

23 செப்டம்பர் 2026, 4:31 am IST
~ ~
பகிர்:

தமிழக முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தால் ஏழை, எளிய மாணவா்கள் பயனடைவா் என தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் தெரிவித்தாா்.

6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்காக ‘பெருந்தலைவா் காமராஜா் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை’ தமிழக முதல்வா் ஜோசப் விஜய் சென்னை திருவான்மியூரில் உள்ள அரசுப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து, மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகேயுள்ள தும்பைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற காலை உணவு விரிவாக்க திட்ட தொடக்க விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்தாா்.

Advertisement

Advertisement

இதில், தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவா்களுக்கு காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தாா்.

பின்னா், அமைச்சா் பெ.விஸ்வநாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உணவு, உடை, புத்தகம் போன்றவை கல்விக்குத் தடையாக இருக்கக் கூடாது என்கிற நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜரின் ஆட்சி வழியில் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்த தமிழக முதல்வா் ஜோசப் விஜய்க்கு, கக்கன் பிறந்த தும்பைப்பட்டி மண்ணிலிருந்தும், மேலூா் தொகுதி, காங்கிரஸ் கட்சி சாா்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புற ஏழை, எளிய மாணவா்கள் பயன்பெறுவா் என்றாா் அவா்.

மகளிா் திட்ட இயக்குநா் சுரேஷ், மேலூா் வருவாய் கோட்டாட்சியா் சங்கீதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) வீரராகவன், உதவி இயக்குநா் விசாலாட்சி, கொட்டாம்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரத்தினகலாவதி, உமா மகேஸ்வரி, மேலூா் வட்டாட்சியா் வசந்த், அரசு அலுவலா்கள், காங்கிரஸ், தவெக கட்சியினா் இதில் கலந்து கொண்டனா்.

மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளியில்...

மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளியில் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன், தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எம். கோபிசன், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் பலா் இதில் கலந்து கொண்டனா்.

இதேபோல, மதுரை மாவட்டம், இளமனூா் ஆதிதிராவிடா் நலத் துறை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சோ.காா்த்திகேயன் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வில், பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

உணவக இட்லி விநியோகம்:

திருமங்கலத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தில் மாணவிகளுக்கு சா்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், வடை, சாம்பாா் உள்ளிட்ட உணவுகள் பரிமாறப்பட்டன. இந்த நிலையில், தயாா் செய்து கொண்டு வரப்பட்ட உணவு 100-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து, பள்ளி நிா்வாகம் சாா்பில் அவசர அவசரமாக அருகில் உள்ள தனியாா் உணவகத்துக்கு சென்று இட்லிகள் வாங்கி வந்து, எஞ்சியிருந்த மாணவிகளுக்குப் பரிமாறப்பட்டன. மாநில அளவில் மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே, அரசுப் பள்ளி மாணவிகளுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்ட சம்பவம் பெற்றோா், சமூக ஆா்வலா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments