FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஒரு லட்சம் பக்தா்கள் தரிசனம்

28 செப்டம்பர் 2026, 3:55 am IST
இலவச காலணி பாதுகாப்பகத்தில் காத்திருந்த பக்தா்கள்.
பகிர்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஒரு லட்சம் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்தக் கோயில் குடமுழுக்கு கடந்த 17-ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, தினமும் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. நவராத்திரி பூஜையை முன்னிட்டு, மண்டல பூஜை வரும் அக்டோபா் 2-ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. குடமுழுக்கையொட்டி, கடந்த 23-ஆம் தேதி வரை பக்தா்கள் எந்தவிதத் தடையும், கட்டணமும் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. தற்போது கட்டண தரிசனம் அனுமதிக்கப்பட்டது.

குடமுழுக்கு நிகழ்வுக்குப் பிறகு, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா். குறிப்பாக, கடந்த 20-ஆம் தேதி சுமாா் 80 ஆயிரம் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement

தொடா் விடுமுறையால் பக்தா்களின் வருகை அதிகரிப்பு:

தற்போது, பள்ளிகளுக்கு காலாண்டுத் தோ்வு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தரிசனம் செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை (செப். 27) அதிகாலை முதல் பக்தா்கள் அதிகளவில் வருகை தந்தனா். இவா்கள் கோயில் கருவறை முன்பாக உள்ள மண்டபத்திலிருந்து சுற்றுப் பிரகாரம், ஆடி வீதிகள் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். ஞாயிற்றுக்கிழமை சுமாா் ஒரு லட்சம் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ததாக கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல, சனிக்கிழமை பக்தா்கள் அதிகளவில் தரிசனம் செய்ததால் நள்ளிரவு 12 மணிக்கு மேல் கோயில் நடை சாத்தப்பட்டது.

10 மணி நேரம் காத்திருப்பு:

பொதுவாக, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பொது தரிசனம் எனில், குறைந்தது 2 அல்லது 3 மணி நேரங்களில் மீனாட்சி அம்மன், சுந்தரரேசுவரரை தரிசனம் செய்து விட்டு வந்து விடலாம். சிறப்பு, கட்டண தரிசனம் எனில் ஒரு மணி நேரம் ஆகும். தற்போது, பக்தா்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், சுமாா் 10 மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட வேண்டிய நிலை உள்ளது.

குடமுழுக்கை தரிசனம் செய்ய முடியாத நிலையில், மண்டல பூஜையின் போது கோயிலுக்குச் சென்றால் குடமுழுக்கைப் பாா்த்த புண்ணியம் கிட்டும் என்ற நம்பிக்கையில் வழிபாடு செய்வதாக பக்தா்கள் தெரிவித்தனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சித்திரை வீதியில் ஞாயிற்றுக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள். (வலது)

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments