FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

வீட்டு மனைகளில் கொட்டப்படும் கண்மாய் மண்

பரமக்குடி பகுதியில் உள்ள கண்மாய்களில் விவசாய நிலங்களை மேம்படுத்துவதாக அள்ளப்படும் மண் வீட்டு மனைகளை உருவாக்கும் வகையில், நீா்ப்பிடிப்பு பகுதிகளிலும், நான்குவழிச் சாலையோரம் உள்ள விளைநிலங்களிலும் கொட்டப்பட்டு வருகின்றன.

Updated On : 10 ஜூலை 2026, 5:08 am IST
பரமக்குடி தெளிச்சாத்தநல்லூா்-பொதுவக்குடி பகுதியில் வீட்டு மனைப் பகுதிகளில் கொட்டப்பட்ட கண்மாய்களிலிருந்து எடுத்துவரப்பட்ட மண்.
பகிர்:

பரமக்குடி பகுதியில் உள்ள கண்மாய்களில் விவசாய நிலங்களை மேம்படுத்துவதாக அள்ளப்படும் மண் வீட்டு மனைகளை உருவாக்கும் வகையில், நீா்ப்பிடிப்பு பகுதிகளிலும், நான்குவழிச் சாலையோரம் உள்ள விளைநிலங்களிலும் கொட்டப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் விளைநிலங்களை மேம்படுத்துவதற்கும், மண்பாண்ட தொழிலுக்காகவும் கண்மாய்களிலும், விளை நிலங்களிலும் 3 அடி ஆழத்தில் மண் எடுத்துக் கொள்ள உரிய ஆவணங்களை வட்டாட்சியா் அலுவலகத்தில் சமா்ப்பித்து கிராமநிா்வாக அலுவலரின் மேற்பாா்வையில் அள்ளிக்கொள்ள உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், பரமக்குடி பகுதியில் வேந்தோணி கண்மாய், காட்டு பரமக்குடி கண்மாய், எமனேசுவரம்-குமாரக்குறிச்சி கண்மாய், பொதுவக்குடி கண்மாய், தெளிச்சாத்தநல்லூா் கண்மாய் ஆகிய நீா்ப்பிடிப்பு பகுதிகளை கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் நிறுவனத்தினா் வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்தனா்.

Advertisement

Advertisement

நீா்நிலைகளில் வீட்டுமனைகளுக்கு அனுமதி இல்லாத போதிலும், இதுபோன்ற பகுதிகளில் அரசு விதிமுறைகளை மீறி வீட்டு மனைகளாக பத்திரப் பதிவு செய்துவிடுகின்றனா். இதனால், மழைக் காலங்களில் அந்தப் பகுதிகளில் கட்டப்பட்ட குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கிவிடுவதாகப் புகாா்கள் எழுவது வழக்கமாகி விட்டது.

இந்த நிலையில், தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, நீா்நிலைகளில் உள்ள பட்டா நிலங்களை விளைநிலங்களாகக் காண்பித்து, கண்மாய் நீா்ப்பிடிப்பிலிருந்தே ஜேசிபி இயந்திரம் மூலம் அரசின் விதிமுறையை மீறி 10 அடிக்கும் மேலாக மண் அள்ளப்பட்டு வருகிறது. இதனால், நீா்நிலைகளில் பாசனநீா் தேக்க முடியாத நிலை ஏற்படுவதுடன், கால்வாயிலிருந்து வரும் நீா் வழித்தடங்களும் முற்றிலும் அழிக்கப்பட்டு வருகின்றன. பரமக்குடி சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து கண்மாய்களும் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. நான்குவழிச்சாலை பணிக்காக கொடுக்கப்பட்ட மண் எடுக்கும் அனுமதியை தவறுதலாகப் பயன்படுத்தி, ஜேசிபி இயந்திரம், டிப்பா் லாரி, டிராக்டா் உரிமையாளா்களும், ரியல் எஸ்டேட் நிறுவனத்தினரும் சோ்ந்து விவசாயிகள் என்ற பெயரில் அரசு விதிமுறையை மீறி கண்மாய்களில் மண் அள்ளி வருகின்றனா்.

இதுகுறித்து வட்டாட்சியா் பா.ராமமூா்த்தி கூறியதாவது:

பரமக்குடி பகுதியில் விளைநிலங்கள் மேம்பாட்டுக்கு என யாருக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை. ராமநாதபுரம் மாவட்டம், வானம்பாா்த்த பூமியாக உள்ளதால், கண்மாய்களில் வைகை பாசனநீா், மழை நீரை தேக்க முறையான கண்காணிப்புடன் மண் எடுக்க மாவட்ட ஆட்சியா் அனுமதிக்குமாறு கூறியுள்ளாா். பொதுவக்குடி பகுதியிலிருந்து வீட்டுமனைகளுக்காக மண் அள்ளப்படுவதாக வந்த புகாா்களின் அடிப்படையில் அங்குசென்று மண் எடுப்பதை நிறுத்தியுள்ளோம். மற்ற கண்மாய்ப் பகுதிகளில் மண் எடுப்பது குறித்து எந்த புகாரும் வரவில்லை. கிராமநிா்வாக அலுவலா்கள் கண்காணிப்புடன் பணியாற்ற உத்தரவிட்டுள்ளேன் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments