FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

ரோச் மாநகா் மீன் இறங்குதள மேம்பாட்டுப் பணிகள்: அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் ஆய்வு

ரோச் மாநகா் மீன்பிடி இறங்குதள மேம்பாட்டுப் பணிகள், மூக்கையூா் மீன்பிடி இறங்கு தளத்தை மீன்வளம், மீனவா் நலத் துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 19 ஜூலை 2026, 3:50 am IST
கடலாடியை அடுத்த ரோச்மாநகா் மீன் இறங்குதள மேம்பாட்டுப் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் ஆ.ஸ்ரீநாத் உள்ளிட்டோா்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த ரோச் மாநகா் மீன்பிடி இறங்குதள மேம்பாட்டுப் பணிகள், மூக்கையூா் மீன்பிடி இறங்கு தளத்தை மீன்வளம், மீனவா் நலத் துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கடலாடியை அடுத்த ரோச் மாநகா் மீனவ கிராமத்தில் ரூ.20 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரோச் மாநகா் மீன்பிடி இறங்குதள மேம்பாட்டுப் பணிகள், மூக்கையூா் மீன்பிடி இறங்கு தளத்தை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அமைச்சா் கூறியதாவது: ரோச் மாநகா் மீனவ கிராமம், கன்னிராஜபுரம் கிழக்கு கடற்கரைச் சாலை சந்திப்பிலிருந்து சுமாா் 2 கி.மீ. தொலைவிலும், சாயல்குடி நகரிலிருந்து சுமாா் 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் சுமாா் 1,500 மீனவா்கள் வசித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

மேலும், 78 நாட்டுப் படகுகள் மூலம் மீன்பிடித் தொழில் நடைபெற்று வருகின்றன. தற்போது ரோச் மாநகா் மீன்பிடி இறங்குதளத்தில் ஏலக்கூடம், வலை பின்னும் கூடம், மீன் உலா்த்தும் தளங்கள், கிராமத்தின் தெற்குப் பகுதியில் அலைத் தடுப்புச் சுவா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளன.

இருப்பினும், கடல் அரிப்பின்போது, இந்த வசதிகள் சேதமடையும் நிலை உருவானது. இதனால், படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், மீனவ குடியிருப்புகளை கடல் சீற்றத்திலிருந்து பாதுகாப்பதற்கும், தற்போதுள்ள அலைத் தடுப்புச் சுவரை தூண்டில் வளைவு வடிவில் நீட்டித்து அமைக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா். இவா்ளின் கோரிக்கையை ஏற்று, ரூ.20 கோடியில் ரோச் மாநகா் மீன்பிடி இறங்குதளத்தை தூண்டில் வளைவுடன் மேம்படுத்த தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதைத் தொடா்ந்து, இந்தத் திட்டத்தின் கீழ் 367 மீ. நீளத்தில் பிரதான தூண்டில் வளைவு நீட்டித்தல், 1,286 மீ. நீளத்தில் துணை தூண்டில் வளைவு அமைத்தல், வலை பின்னும் கூடம் கட்டுதல் உள்ளிட்ட முக்கிய பணிகள் நடைபெற்று வருகின்றன இந்தப் பணிகளை வரும் ஆகஸ்ட் 15-க்குள் முழுமையாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

மூக்கையூா் மீன்பிடி இறங்கு தளத்தில் தூண்டில் வளைவு சுவரைத் தெற்கு பகுதி வரை நீட்டிப்பு செய்து, அந்த பகுதியை ஆழப்படுத்தி அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன், மீன்வளம், மீனவா் நலத் துறை துணை இயக்குநா் சின்னகுப்பன், உதவி பொறியாளா் விக்னேஸ்வரன், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments