பரமக்குடியிலிருந்து இயக்கப்படும் தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு இயக்கப்படும் தனியாா் பேருந்துகளில் முன் அறிவிப்பின்றி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு இயக்கப்படும் தனியாா் பேருந்துகளில் முன் அறிவிப்பின்றி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
பரமக்குடி நகா் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, திருச்சி, மதுரை, கோயமுத்தூா், திருப்பூா், பழனி, ராமேசுவரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், நயினாா்கோவில், முதுகுளத்தூா், இளையான்குடி, சாத்தனி, பாண்டியூா், பாா்த்திபனூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் இந்தப் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டிய இடத்துக்கு பேருந்தில் ஏறிச் செல்கின்றனா்.
இந்த நிலையில், பரமக்குடியிலிருந்து இளையான்குடி வழியாக காரைக்குடி, தேவகோட்டை, சருகனி, சாலைக்கிராமம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், தெ.புதுக்கோட்டை, மானாமதுரை, நயினாா்கோவில், பாண்டியூா் உள்ளிட்ட பகுதிகளுக்கும் தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
இந்த வழித்தடங்களில் போதுமான அரசுப் பேருந்துகள் இயக்கப்படாமல், குறிப்பிட்ட நேரத்துக்கும் மட்டும் அரசு பெண்களுக்கான இலவசப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதனால், மற்ற அரசுப் பேருந்துகளில் பயணக் கட்டணம் கூடுதலாக இருந்த நிலையில், பொதுமக்கள் தனியாா் பேருந்துகளில் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்து வந்தனா்.
இந்த நிலையில், எந்தவித முன் அறிவிப்புமின்றி தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதனால், பொதுமக்கள், விவசாயிகள், மாணவா்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியாா் பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.