கலாசாரம், வாழ்வியல் தத்துவங்களை உணர்த்துவது இலக்கியத்தின் சிறப்பு: அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர்
ஒரு சமுதாயத்தின் கலாசாரப் பெருமைகள் மற்றும் வாழ்வியல் தத்துவங்களை உலகுக்கு உணர்த்துவது
ஒரு சமுதாயத்தின் கலாசாரப் பெருமைகள் மற்றும் வாழ்வியல் தத்துவங்களை உலகுக்கு உணர்த்துவது இலக்கியத்தின் சிறப்பு என காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் நா. ராஜேந்திரன் தெரிவித்தார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகள்துறை சார்பில் கீழை மற்றும் மேலை நாடுகளின் திறனாய்வுக் கோட்பாடுகளும், திறனாய்வில் அவற்றின் பயன்பாடுகளும் என்ற தலைப்பிலான தேசியக்கருத்தரங்கம் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய 2 நாள்கள் நடைபெற்றன.
இக்கருத்தரங்கினை துணைவேந்தர் ராஜேந்திரன் தொடங்கி வைத்துப் பேசியதாவது:
பொதுவாக திறனாய்வாளர்களே ஒரு புத்தகத்துக்கு உயிரூட்டி அதனைப் பிரபலப்படுத்துகிறார்கள். விமர்சனங்கள் இல்லை என்றால் புத்தகங்கள் இல்லை. விமர்சனம் என்பது மனிதனின் சுவாசத்தைப் போன்று முக்கியத்துவமானது. ஒரு சமுதாயத்தின் கலாசாரப் பெருமைகளையும், வாழ்வியல் தத்துவங்களையும் உலகிற்கு உணர்த்துவது இலக்கியத்தின் சிறப்பாகும்.
இலக்கியத்தின் அற்புதத்தையும், அழகையும் சுவைபட உலகிற்கு எடுத்துக்காட்டுவதே திறனாய்வின் நோக்கமாக இருந்து வருகிறது. எனவே கீழை மற்றும் மேலை நாடுகளின் இலக்கியக் கோட்பாடுகளைப் பயன்படுத்தி இலக்கியத்தின் உன்னதத்தை உலகிற்கு எடுத்துகாட்டுவதிலும், வெளிப்படுத்துவதிலும் விமர்சனங்கள் வரவேற்புக்குரியது என்றார். பல்கலை. பதிவாளர் ஹா. குருமல்லேஷ் பிரபு தலைமை வகித்துப் பேசினார். கருத்தரங்கில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் ஆங்கிலத்துறை பேராசிரியர் கா. செல்லப்பன், வாராங்கல் தேசிய தொழில்நுட்பக் கழக பேராசிரியர் கேசவராவ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில், சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக் கோவையை துணைவேந்தர் ராஜேந்திரன் வெளியிட, அதனை பேராசிரியர் செல்லப்பன் பெற்றுக்கொண்டார். கருத்தரங்கின் நோக்கம் குறித்து அழகப்பா பல்கலைக்கழக ஆங்கிலத்துறைத் தலைவர் (பொறுப்பு) பி. மதன் விளக்கிப் பேசினார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக முன்னாள் ஆங்கிலத்துறைத் தலைவரும், மத்திய செம்மொழி ஆராய்ச்சி நிறுவன உறுப்பினருமான பி. மருதநாயகம் நிறைவுரையாற்றினார்.
தென்னிந்திய ஆங்கில ஆராய்ச்சிக் கழக முன்னாள் பேராசிரியர் எஸ். வெங்கடேஸ்வரன் சிறப்புரையாற்றினார். இதில் மாணவர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அழகப்பா பல்கலைக்கழக ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் மு. நடராஜன் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.