சோழபுரம் அருள்மொழிநாத சுவாமி கோயில் தேரோட்டம்
சிவகங்கை அருகே சோழபுரத்தில் உள்ள அறம் வளர்த்த நாயகி அம்மன் உடனாய அருள் மொழிநாத சுவாமி கோயில் ஆனி உற்சவத் திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை மாலை தேரோட்டம் நடைபெற்றது.
சிவகங்கை அருகே சோழபுரத்தில் உள்ள அறம் வளர்த்த நாயகி அம்மன் உடனாய அருள் மொழிநாத சுவாமி கோயில் ஆனி உற்சவத் திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை மாலை தேரோட்டம் நடைபெற்றது.
சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உள்பட்ட பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆனி மாத உற்சவத் திருவிழா 10 நாள்கள் நடைபெறும். இத் திருவிழா கடந்த ஜூன் 17 ஆம் தேதி காப்புக் கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் காலை, மாலை வேளைகளிலும் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, பிரியாவிடை கோலத்துடன் சுவாமியும், அம்மனும் ரிஷபம், அன்னம், மயில், காமதேனு, கிளி, குதிரை, பூதம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் சுவாமியும், அம்மனும் தேரில் எழுந்தருளினர். மாலை 4.15 மணி அளவில் பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர் மாலை 5.23 மணிக்கு நிலையை அடைந்தது. தேரோட்டத்தில் வழிநெடுகிலும் பக்தர்கள் மாலை சாற்றியும், அர்ச்சனை செய்தும் வழிபட்டனர். இதில், சோழபுரம், சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை, சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் டிஎஸ்கே. மதுராந்தகி நாச்சியார் உத்தரவின்பேரில், தேவஸ்தான மேலாளர் பா. இளங்கோ, கோயில் சரக கண்காணிப்பாளர் மு. வேல்முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.