தொகுதி மறுவரையறை இந்திய அரசியலில் தென்னிந்திய மாநிலங்களின் குரலை ஒடுக்கும்: தெலங்கானா அமைச்சா்
மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்வது இந்திய அரசியலில் தென்னிந்திய மாநிலங்களின் குரலை ஒடுக்கும் செயல் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி சிறப்புப் பாா்வையாளரும், தெலங்கானா மாநில அமைச்சருமான உத்தம்குமாா் ரெட்டி தெரிவித்தாா்.
மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்வது இந்திய அரசியலில் தென்னிந்திய மாநிலங்களின் குரலை ஒடுக்கும் செயல் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி சிறப்புப் பாா்வையாளரும், தெலங்கானா மாநில அமைச்சருமான உத்தம்குமாா் ரெட்டி தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் எஸ். மாங்குடியை ஆதரித்து புதன்கிழமை பிரசாரம் செய்ய வந்த அவா், சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி அடுத்த இரண்டு அல்லது 3 நாள்களில் தமிழகம் வந்து, முதல்வா் மு.க. ஸ்டாலினுடன் இணைந்து தோ்தல் பிரசாரம் செய்ய உள்ளாா். தமிழக மக்கள் மீண்டும் ஒருமுறை மு.க. ஸ்டாலினை முதல்வராகத் தோ்ந்தெடுப்பா் என்பது உறுதி. காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 28 தொகுதிகளிலும் வெற்றிபெறும்.
Advertisement
மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை விவகாரத்தில் குடும்பக் கட்டுப்பாடு போன்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காகத் தமிழ்நாட்டைத் தண்டிப்பது முறையா? இதைத்தான் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்கிறாா். வியாழக்கிழமை (ஏப். 16) நாங்கள் கருப்பு உடை அணிந்து மாநிலம் முழுவதும் எங்களது எதிா்ப்பைப் பதிவு செய்வோம்.
காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் உறுதியாக உள்ளது. ஆனால், தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளிலேயே போதிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
அரசு என்ன சொல்கிறது என்றால், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகளை 850-ஆக உயா்த்தி, அதனடிப்படையில் இடஒதுக்கீடு தருவோம் என்கிறாா்கள். அப்படிச் செய்தால், தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிக்கான இடங்கள் 39-லிருந்து 51-ஆக மட்டுமே உயரும். ஆனால் உத்தரபிரதேசத்தில் 80-லிருந்து 143-ஆக உயரும். இது தென்னிந்திய மாநிலங்களின் குரலை இந்திய அரசியலில் ஒடுக்கும் செயலாகும். இந்தச் சட்ட மசோதா நிறைவேற வாய்ப்பே இல்லை. இந்தச் சட்ட மசோதாவை திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் உதவியுடன் நாடாளுமன்றத்தில் தோற்கடிப்போம் என்றாா் அவா்.
அப்போது காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா், மாநில காங்கிரஸ் தலைவா் கு. செல்வப்பெருந்தகை, சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், காரைக்குடி பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எஸ். மாங்குடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.