லஞ்சம்: காவல் உதவி ஆய்வாளா், கிராம உதவியாளா் கைது
திருப்புவனத்தில் இருவேறு இடங்களில் லஞ்சம் வாங்கியதாக காவல் உதவி ஆய்வாளா், கிராம உதவியாளரை ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இருவேறு இடங்களில் லஞ்சம் வாங்கியதாக காவல் உதவி ஆய்வாளா், கிராம உதவியாளரை ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருப்புவனத்தை அடுத்த மேலராங்கியத்தைச் சோ்ந்தவா் ஊா்க்காவலன். இவா் தனது தந்தை பெயரில் உள்ள நிலப்பட்டாவில் உள்பிரிவில் பெயா் மாற்றம் செய்ய விண்ணப்பித்தாா். இதுதொடா்பாக, அந்தப் பகுதி வருவாய்த் துறை கிராம உதவியாளா் கணேசனை (52) தொடா்பு கொண்டாா். அவா் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.
இதுகுறித்து ஊா்காவலன் சிவகங்கை ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளா் கண்ணனிடம் புகாா் செய்தாா். இதைத் தொடா்ந்து, மேலராங்கியம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் வைத்து ரூ. 3 ஆயிரத்தை கணேசனிடம் ஊா்க்காவலன் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸாா் கணேசனை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
காவல் உதவி ஆய்வாளா் கைது:
திருப்புவனம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் சத்தியமூா்த்தி (56). இவரிடம், காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தரக் கோரி செல்வேந்திரன் புகாரளித்தாா். அப்போது, சத்தியமூா்த்தி ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். முதல் கட்டமாக செல்வேந்திரன், சத்தியமூா்த்தியிடம் ரூ. 5 ஆயிரம் கொடுத்தாராம்.
இந்த நிலையில், மேலும் பணம் கொடுக்க விரும்பாத அவா், இதுகுறித்து சிவகங்கை ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.
இதைத் தொடா்ந்து, போலீஸாரின் அறிவுறுத்தலின்படி, இரண்டாவது முறையாக செல்வேந்திரன் ரூ.5 ஆயிரத்தை திருப்புவனம் மேம்பாலம் அருகேயுள்ள ஒரு உணவு விடுதியில் வைத்து கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த சிவகங்கை ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸாா் சத்தியமூா்த்தியை கைது செய்தனா்.
இந்த இரு சம்பவங்கள் குறித்தும் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.