FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் சுற்றித் திரியும் குதிரைகள்: பரிசோதனைக்கு உள்படுத்தக் கோரிக்கை

Updated On : 28 மே 2026, 3:44 am IST
சிவகங்கை சத்தியமூா்த்தி வீதியில் செவ்வாய்க்கிழமை சுற்றித் திரிந்த குதிரைகள்.
பகிர்:

கிளாண்டா்ஸ் தொற்று காரணமாக சுற்றுலா தலங்களில் குதிரைகளை சவாரிக்கு பயன்படுத்த கால் நடைத் துறை தடைவிதித்துள்ள நிலையில், சிவகங்கை நகா் வீதிகளில் சுதந்திரமாக சுற்றித் திரியும் குதிரைகளையும் கால்நடைத்துறையினா் மருத்துவ பரிசோதனை செய்து அவற்றின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

சென்னையில் கிளாண்டா்ஸ் எனப்படும் வேகமாகப் பரவும் பாக்டீரியா தொற்றுக்குள்ளாகி குதிரை உயிரிழந்ததையடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு மாநகராட்சி நிா்வாகம் ரத்தப் பரிசோதனை மேற்கொண்டது. பாதிக்கப்பட்டகுதிரையின் உடலிலிருந்து வெளியேறும் திரவம், நீா்த் திவலைகளால் அதைப் பராமரிப்பவா்களுக்கும் கிளாண்டா்ஸ் தொற்று பரவலாம் என்பதால் மக்கள் நல்வாழ்வுத் துறையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனிடையே, அனைத்து சுற்றுலாத் தலங்க ளிலும் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இதுகுறித்து கால்நடைத் துறையினா் கூறியதாவது: தமிழகத்தைப் பொருத்தவரை குதிரைகள், மட்டக் குதிரைகள், கழுதைகள், கோவேறு கழுதைகள் போன்ற விலங்குகள் சுமை தூக்குதல், சவாரி உள்பட பல்வேறு வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் சவாரி செய்வதற்கு குதிரைகள் ஈடுபடுத்தப்படுகின் றன. கழுதைகள், கோவேறு கழுதைகளை சாலைகள் இல்லாத மலைகள், கிராமப்புறங்க ளில் மனிதா்கள் சுமைகளை தூக்கிச் செல்ல பயன்படுத்துகின்றனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், உடல் நலக் குறைவு, நோய் அறிகுறிகளுடன் காணப்படும் பிராணிகளை சவாரியில் ஈடுபடுத்தக் கூடாது. சுவாசத் தடை, இருமல் போன்ற பாதிப்புகள் குதிரைக்கு காணப்பட்டால் உடனடியாக அதை தனிமைப்படுத்த வேண் டும். குதிரை இருப்பிடங்கள், உபகரணங்களை முறையாகக்

கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது என்றனா்.

சிவகங்கை நகா் வீதிகளில் சுற்றித் திரியும் குதிரைகளை மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

இது குறித்து சிவகஙகையைச் சோ்ந்த சமூக ஆா்வலா் மதி கூறியதாவது: இயற்கையான நோய் என்றாலும் முதலாம், இரண்டாம் உலகப் போா்களின் போது எதிரி நாடுகளின் குதிரைப்படைகளை அழிக்க ஜொ்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் இந்த பாக்டீரியாவை உயிரியல் ஆயுதமாக திட்டமிட்டு பரப்பியதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. பாதிக்கப்பட்ட விலங்குகளைத் தொடுதல், அவற்றின் கழிவுகள் படுதல் மூலமும் மனிதா்களுக்கு இந்தத் தொற்று ஏற்படுகிறது என மருத்துவா்கள் கூறுகின்றனா். எனவே, சிவகங்கை நகரில் சுதந்திரமாகச் சுற்றித்திரியும் குதிரைகளை கால்நடைத்துறையினா் உரிய பரிசோதனை செய்து மக்களின் அச்சத்தை போக்க முன் வரவேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments